வந்தனம் செய்கின்றேன்

   

பியாகு ராகம்
ரூபக தாளம்

கண்ணிகள்

வந்தனம் செய்கின்றேன் மனம் வைத்தழைத்துவாடி
இந்திங்கே கதிரவன் போலெரிக்கிறானே போடி [வ]

ஆயர்குலப்பெண்டுகளாய் அலர்மேலயன் படைத்தான்
பேயர்போலப் பிதற்றிடப் பிராணேசனு மடித்தான் [வ]

அண்டமெல்லாம் உண்டுபண்ணும் ஆதிமூலனேடி
அண்டர் நின்று தண்டமிடும் அடியைப்பணிபோடி [வ]

பத்தியெனும் வலையிலகப்படும் பரமனேடி
அத்தியின்பால் வந்திடரை அகற்றினவன் போடி [வ]

எங்கள்குல தெய்வமேடி யெங்கேபோனானோடி
மங்களமாயிருந்தேனவன் செங்கைவாழ் போழ் தேடி [வ]

அலங்கார ரூபனேடி ஆசைமேருவேடி
தலங்கள் தோறுமே விளையாடும் தனியனேடி [வ]

சர்வம் விஷ்ணுமயமெனவே சகலருமே போற்றும்
சர்வேசுரனாங் கிருட்டிணன் தாள் சர்வவினையுமாற்றும் [வ]

இன்பங்களெல்லாம் நிறைந்த வீசனைப்பார் தோழி
அன்பனைப்பிரிந்தல மந்தேன்கதி யாரிங்ஙனம் தோழி [வ]

திருக்கண்களாற் பார்ப்பானோ நம்தீவினை தீரவே
பெருகுதேடி ஆசைவெள்ளம் பெருமானைச்சேரவே [வ]

நிமிஷமுமென்னைவிட்டு நீங்காதிருந்த நேயன்
அமிர்தமீந்த வாயன்நம் மாயர்கள் சகாயம் [வ]


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube