| |
|
ஏகாந்தத்தில் மோகலீலை
|
|
எமுநாகல்யாணி இராகம் ரூபக தாளம்
கண்ணிகள்
ஏகாந்தத்தில் மோகலீலை எண்ணின்றிச் செய்தானே
ஏகாந்தலீலையெல்லாம் எண்ணியழச் செய்தானே (கண்ணன்)
புண்ணாய்மனம் நோகுதே போகுமோ துயர் தோழி
எண்ணாமற் செய்தானே ஏகுமோ துயர் தோழி [ஏ]
வந்தென்முகத்தோடே முகம்வைத்து வாழ்விப்பானோ
தந்தவின்பங்கள் போலின்னம்தந்து வாழ்விப்பானோ [ஏ]
நினைப்பவர் மனக்கிலேசங்கள் நீக்கிடுவோனேடி
நினைந்தாடிப்பாடியழுதும் இங்குவரக்காணோமேடி [ஏ]
கண்ணனைப்போல் கல்மனத்தோர் காசினிமேலுண்டோ
எண்ணியயெண்ணம்போல் செய்திடுவா னெங்கள்விண்டோ [ஏ]
கன்றுகளிடத்திலும் கருணை காணோமேடி
அன்றுகன்று பாலர்பசுக்க ளானவனேடி [ஏ]
பின்னாலேயோடிப் பிழைக்கும் பெற்றங்கள்வாடுதே
என்னாலே என்னமுடியும் என்மனந் தேடுதே [ஏ]
நள்ளிருள் போகாமலே நம்மை வாட்டுதேயிங்ஙன்
எள்ளெண்ணெய்போலிருப்பவ னென் றியம்பிடுவதெங்ஙன் [ஏ]
இரவுபக லானாலும் இத்துன்பம் போமோடி
பரமபுருஷன் கொடுத்த பாக்கிய மீதோடி [ஏ]
நித்தியமுத்தர்கள் துதிசெயும் நித்தியனேடி
சத்திய சங்கல்ப சங்க சக்கிரபாணியனேடி [ஏ]
|
|