வாழ்த்துக்கவி


   

(வாழ்த்துக் கவி இயற்றியவர்;    டி.ஆர் பத்மநாபய்யர்(1899--1963)

T.R.Padmanabaiyer

      பகவான் ஸ்ரீ கண்ணன் திருவாய் மலர்ந்தருளிய கீதையை நன்கு கற்று தனது மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர்.மதுரை கீதாபவன ஸ்தாபகர். கீதையை ஸெளராட்ர மொழியில் மொழி பெயர்ப்புசெய்தவர்,.கீதா சுலோகங்களைப் பற்றி எப்படி கேள்வி கேட்டாலும் பதில் கூறும் திறமை பெற்றிருந்தமையால் 'கீதா அஷ்டவதானி 'என்னும் பட்டம் பெற்றவர். வெண்பாக்களை இயற்றுவதில் வல்லமை பெற்றிருந்ததினால் ' வெண்பாப் புலி 'எனும் பட்டத்தையும் பெற்றவர். இவரிடம் அனேக ஆண்களும், பெண்களும் கீதையக் கற்று கீதையைப் பாராமல் பாராயணம் செய்யும் திறமை பெற்றுள்ளார்கள். கீதை என்றால் ஸெளராஷ்ட்ரர், ஸெளராஷ்ட்ரர் என்றால் கீதை என்று சொல்லப்படும் அளவிற்கு கீதையை கற்பித்தவர் டி.ஆர் பத்மநாபய்யர் என்று சுத்தானந்த பாரதியாரால் புகழப்பட்டவர்.

கீதையை தமிழில் வெண்பாக்களாக ஆக்கியுள்ளார்.கீதை படிப்பதினால் உண்டாகும் நன்மைகளை 'கீதா கீதுன்' என்றநூலை ஸெளராஷ்ட்ரம் மற்றும் தமிழில் ஆக்கியுள்ளார்.இவரது கீதையின் மேலுள்ள ஈடுபாட்டையும் திறமையையும் அறிந்து, தேசப் பிதா மஹாத்மா காந்தி அவர்கள் தாம் மதுரைக்கு விஜயம் செய்யும் சமயம் அவர் தம் முன்னிலையில் கீதையைப் பாராயணம் செய்ய வேண்டுமென்று தம் கைப்பட கடிதம் எழுதியபடி அவர் முன் கீதை 18 அத்தியாயங்களையும் பாராயணம் செய்து மஹாத்மா காந்தியால் 'சிறந்த உச்சரிப்பு' எனும் பாராட்டைப் பெற்றவர்.

1 நடனகோ பாலற்கு நாயகியான் என்றே
நடனமுடன் கீர்த்தனமெந் நாளும்--உடனிகழ்த்தி
ஊரை யலங்கரித்த உத்தமனைப் போற்றியவர்
பேரைப் பெருமைபெறப் பேசு

2 பேசப் பெருகும் பெருங்கீர்த்தி வாய்ந்தவரைப்
பேசப் பெருமகிழ்ச்சி பெற்றோமே--ஆசைப்
பகையொழித்த பண்பன் பரமனருட் சேரும்
வகைநன் கறிந்தானை வாழ்த்து

3 வாழ்த்துசொலிக் கீர்த்தனைகள் வாசுதே வற்கியற்றி
வாழ்கை புனிதமுற வைகினார் --ஆழ்க்கருத்து
வைத்தமைந்த கீர்த்தனையின் வள்ளலைப் போற்றுவம் யாம்
உய்த்திடவே நாளும் உயர்ந்து

4 உயர்ந்தநல் பக்தியினை ஊட்டும் கவிதைக்கு
உயிர்தெய்வ மாய்மதுரை ஊரில் --உயர்கொப்பான்
சாமியார் என்னும்பேர் சந்ததமும் நின்றிலங்கத்
தாமிருந்தார் சீடருடன் தான்

5 தானே தனக்குவமை சாற்றுந் தகைமையுளான்
வானேர் கருணைபொழி வள்ளலாம் --தேனேர்
மொழியால் மனிதரெலாம் முன்னேற்ற மெய்த
வழியா யுணர்த்துமிவர் மாண்பு

6 மாண்புப் பொருளை மகிதலத்தோர் தாமுணரக்
காண்பித் தருளுங் கருமத்தைப் --பூண்பவரே
அந்தக் கடவுள் அமிசமதைத் தான்பெற்று
வந்தவராய்ச் சாற்றல் மரபு

7 மரபும் உலக வழக்காம் இரண்டும்
விரவி வருங்கவிதை மேன்மை --பரவுருவின்
பண்பை எளிதில் பலரும் அறிந்திடவே
திண்பயனைச் செய்யுமெனச் செப்பு

8 செப்பும் இளமையிலே தெய்வ நெறிபற்றித்
தப்பில் பிரமச் சரியமது --மெய்ப்பயனாய்
ஏற்றெழுப தாண்டுவரை இன்னிசையோடே யிருந்தோன்
பேற்றையே எண்ணிமனம் பேணு

9 பேணிப் பெருந்தவத்தில் பீடுபெற நின்றவனைக்
காணிலெல் லோருங் கரங்குவிக்க --மாணிக்கக்
கட்டியே யென்னக் கவின்பெறு நற்பாதமிசை
ஒட்டியே வீழ்வார் உவந்து

10 உவந்து கதியென்றே உற்றவர் தங்கள்
பவந்துடைக்க வல்லதொரு பக்தி --நவமாகக்
காட்டினான் அக்துகடைப் பிடித்தார் தங்களுக்கு
வாட்டுமோ வல்வினைகள் வந்து

11 வந்துமீண்டும் பிறவாவாழ்க்கையைப் பெற்றனர் காண்
அந்த ஆழ்வாரின் அணியடைந்தார் --வந்திக்க
வைகுண்ட ஏகா தசிதிதியில் மண்துறந்தே
கைகண்ட மாண்படைத் தான்காண்

12 காணத் திருமேனி கண்ணா யிரம்வேண்டும்
பூணுங் கிரீடப் பொலிவுடனே --வீணைகை
ஏந்துமோர் நெற்றி இயற்றென் கலைநாமம்
சாந்த முகத்தோ டுந்தான்.


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube