குரு சரணம்

   

நவ ராகமாலிகை ஆதி தாளம்

(ஆக்கியவர் ஸ்ரீமதி ஆண்டவன் பிச்சி அம்மையார்)

பல்லவி

Andavan Pichi Ammaiyar

1. ராகம்; பியாக்

நடன கோபால நாயகி உன்பாதம்
நம்பி வந்தேன் ஸ்வாமி ஸ்ரீ   [நடன]

அநுபல்லவி

வடபத்ரார்யர் பாதம் வணங்கி அருள்பெற்று
திடபக்தி வைராக்ய ஞான சீலராய் வாழ்ந்த   [நடன]

2. ராகம்; மாண்டு

சீர்மிகும் மதுரையில் ஸெளராஷ்ட்ர குலந்தன்னில்
சிஷ்டராம் ரங்கார்யர் லக்ஷிமியன்னை தவத்தால்
மார்கழி மாதத்தில் மிருகசீரிஷம் தன்னில்
மகனாய் பிறந்து ராமபத்ரனென்றே வளர்ந்தாய்  [நடன]

சரணங்கள்

3. ராகம்; சிந்துபைரவி

ஐயிரண் டாண்டினில் அறிவினில் சிறந்தாய்
அன்புடன் கடிந்த தாய் தந்தையைப் பிரிந்தாய்
தெய்வ ஒளிகாணத் தென்பரங்கிரி சென்றாய்
தேகம்மறந்து த்யானயோகத்தில் கண்டறிந்தாய்  [நடன]

4. ராகம்; தேஷ்

சிவராஜ யோகத்தில் சிந்தை கலந்து--மா
தவராஜ யோகத்தில் தன்மய மாயினாய்
அவமாயை கடந்தாய் ஆத்மஞானியாய் வாழ்ந்தாய்
பவபயம் தீர்த்திட பாரில் அவதரித்தாய்   [நடன]

5. ராகம்; காபி

நாத லயத்துடன் நாம பஜனம் செய்தாய்
வேத மொழியால் பாடி விளங்கிடவும் வைத்தாய்
ஸ்ரீதரன் பாதத்தை சிந்தையுள் வைத்தணைத்தாய்
ஆதரவுடன் அவன் ஆசைநாயகி யானாய்   [நடன]

6. ராகம்; பாகேஸ்ரீ

ஆண்டாள் அவதாரமாய் அவனியில் நீ வந்தாய்
ஆனந்தமாய்ப் பாடி அரங்கன் தேவியுமானாய்
பூண்டாய் புகழ்மாலை புவியுள்ள நாள்வரை
புகழுடம் பெடுத்தாய் அழகனை அடைந்தாய்   [நடன]

7. ராகம்; மல்கோஷ்

பக்குவ காலத்தில் பக்த ரெல்லாம் வருந்த
முக்கோடிஏகா தசி யன்று முக்திபெற்றாய்
தக்கபடி இந்த தரணியுள்ளோர்க் கருளி
முக்குணம் கடந்தருள் மோனநிலை பெற்றாய்   [நடன]

8. ராகம்; பிம்பிளாஸ்

ஆனைமலைக் கெதிரில் மோனசமாதி யுற்றாய்
வானவர்கள் போற்றும் வாழ்வு பெற்றாய்--என்றும்
தேனைப்போல் இனிக்குமுன் திவ்யசங் கீர்த்தனத்தை
மானிடர் பாடிவுய்ய மகிழ்வுடன் வரம்தந்தாய்   [நடன]

9. ராகம்; மத்தியமாவதி

பாம்பின்மேல் ஆடிய பாலனைப் பாடியே
பரமானந்தம் பெற்ற பாக்யசாலி நீயே
சாம்பிணங்கள் வாழும் ஜகத்தினில் நீ என்றும்
சாகாவரம் பெற்றாய் சாஸ்வத நிலையுற்றாய்   [நடன]


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube