கைங்கர்யம் கிங்கர்யம் காம்ஸாஜா மெனஸ்தெனஸ்கி
கருமு ராணுமு ஸம்டி கெஷ்டம் பொந்தி3லேது ரா:ன்
கைங்கர்யமுஸ் கத்கொ கருமுராணு கடிலிஜாய் அத்தொ

     This section to reverend people and organization those worked hard to bringout the fame of Sri Natanagopala Nayagi swamigal and his keerthans to the world. Please select each section to browse through the contents.

பூஜ்யஸ்ரீ ஸித்த நரஹரி குருஜி

Sidha Narahair Swamiji

     மதுரையில் ஆன்மிகத்துறையில் சிறந்து விளங்கும் 'சித்தாஸ்ரமத்தை ஸ்தாபித்து அதன் தலைவராக இருந்து அரும் பணியாற்றிய ஸ்ரீ சித்தநரஹரி சுவாமிகள் ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகளின் மகிமையை நம் சமூகத்தினரிடையே மட்டுமல்லாமல் பிற சமூகத்தினரிடேயும் பரப்புவதே இலட்சியமாகக் கொண்டிருந்தார். Divine Kritis of Nayagi Swamigal - Vol.1 என்ற அருமையான நூலில் நாயகி சுவாமிகளின் 12சௌராஷ்டிர கிருதிகள் தேவநாகரி,ரோமன், தமிழ் எழுத்தக்களில் கொடுக்கப்பட்டுள்ளன. பேராசிரியர் A.ஸ்ரீநிவாசராகவன் அவர்கள் கிருதிகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து விரிவுரை தந்திருக்கிறார்கள். காலம் சென்ற சங்கீத கலாநிதி ஸ்ரீ T.L. வெங்கட்ராமய்யர் (முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி) அவர்கள் நூல் முன்னுரையினையும் சென்னை டாக்டர் V.இராகவன்(சங்கீத நாடக அகாடமி டில்லி) அவர்கள் நூல் முகயுரையினையும் தந்து பாராட்டியுள்ளார்கள்.இந்நூலை சென்னை சங்கீத அகாடமியின் 44வது மகாநாட்டிற்குத் தலைமை வகித்த 'சங்கீத கலாநிதி' D.K.பட்டம்மாள் அவர்கள் வெளியிட்டுள்ளார். இந்த நூலையும் மற்றும் 'கண்ணனைக்கலந்த காதலர்' (ஸ்ரீமதி சிவானந்த விஜயலெட்சுமி எழுதியது) என்ற நாயகி சுவாமிகளைப் பற்றிய ஆராய்ச்சி நூலை சித்தாஸ்ரமத்தின் மூலம் வெளியிட்டுள்ள சித்தாஸ்ரமத்தையும் அதன் தலைவர் சித்த நரஹரி குரு ஜி அவர்களையும் நாவாரப் பாராட்டி மகிழலாம்

(நன்றி திரு கே.ஆர். சேதுராமன்,தமிழ்நாட்டில் சௌராஷ்டிரர் முழு வரலாறு)


'அற்புத கோமுகியும் அபூர்வ கங்கா ஸாகரமும்' என்ற நூலில் வித்வான் K.ராமநாதன் எழுதியுள்ள பூஜ்யஸ்ரீ ஸித்த நரஹரி குருஸ்வாமிகள் வாழ்க்கைச் சுருக்கம்

உள்ளத்தே பெருகி வெளிப்படும் உண்மை ஒளி வட்டமிடும் திருமுக மண்டலம், அனைவரையும் வசீகரிக்கும் அருட்பிரகாசத் திருக்கண்கள்,தித்திக்கும் சொல்லமுதம் மலரும் திருப்பவளச் செவ்வாய், தொட்டது துலங்கும் தூயநெடுங்கரங்கள்,இட மெல்லாம் தலமாக்கி நடந்த திருப்பாதங்கள், எளிய வெள்ளாடை யில் ஏற்றம் கண்ட திருமேனி, புன்னகை பூத்த புனித வரவேற்பு. இவையனைத்தின் ஒட்டு மொத்த உருவமே மதுரை ஸித்தாச்ரம நிறுவனர் பூஜ்யஸ்ரீ ஸித்த நரஹரி குருஜி.

மதுரை மாநகரில் செல்வ வளம் கொழிந்த சித்தா குடும்பத்தில் ஸ்ரீமதி & ஸ்ரீ வெங்கடாஜலபதி அய்யர் அவர்கள் தவப்புதல்வராக கி.பி.1923ல் தோன்றிய ஸ்ரீ S.V.நரசிங்கராவ் கருவிலே திருவுற்றவர்.

அடி உதவுவதுபோல் அண்ணன் - தம்பியும் உதவமாட்டார் என்பது பொருள் பொதிந்த பொன்மொழி. திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற ஸமாராதனையில் இவர் தமையனார் இவரை அடித்த அடியும் உதவியது. ஆம் குருபாதம் பெற, ஸ்ரீஸித்த குருஹரி திருவடியும் உதவியது. இறவாத பெருநிலப்பேறுபெற்றுத் திகழ. இளம் பருவத்திலேயே வீடு (விடுதலை) தேடிப் பிறந்த வீட்டைத் துறந்தார்.தேச சஞ்சாரம் செய்தார் - காடு மலை நதி பல கடந்தார் இமய மலைச்சாரலை அடைந்தார். பற்பல மகான்களுடன், அருளாளப் பெரு மக்களுடன் அளவளாவினார் மெய்ஞ்ஞான விளக்கம் பெற்றார். ஒரு நாள் காலை பெருந்தவஸ்வியும் மஹா ஞானியுமான ஒரு பெருமகனார் வந்து ஆயிரம் இதழ் தாமரை மலர் ஒன்றை வழங்கி ஞானோபதேசம் அருளினார் - ஸித்த நரஹரி என்னும் திவ்விய நாமம் பெற்றார்.

பின்னர் மதுரை வந்து சேர்ந்தார். அழகர் மலைக்காட்டில் ஆசிரமம் அமைத்துக் கொள்ள எல்லா ஏற்பாடுகளும் செய்தார். அன்பர் பலரின் உருக்கமான வேண்டுதலுக்கு இணங்கி மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் மேல்கரையில் 'ஆத்மஞானி' ஸ்ரீ K.L.N. ஜானகிராம் அவர்கள் வழங்கிய நிலத்தில் ஸித்தாச்ரமத்தை உருவாக்கினார். தன்யவான்கள் பலர் உதவியசெல்வத்தையும் பூர்வாச்ரம வழிவந்த செல்வத்தையும் ஆச்ரம மற்றும் ஆச்ரம நற்பணி வளர்ச்சிக்கே பயன்படுத்தினார். கல்வி,கலை,கலாச்சாரம்,ஸெளராஷ்ட்ர,தமிழ், ஸம்ஸ்க்ருத மொழி இலக்கியங்கள் முதலான வளர்ச்சிக்கும் மக்கள் நல மேம்பாட்டுக்கும் வழிவகை செய்தார். பல அரிய நூல்களைப் பிரசுரித்து வெளியிட்டு மக்கள் ஸித்த சுத்தி பெற உதவினார். நாள்தோறும் ஞானயக்ஞமாக ஸத் சங்கம் நடத்தினார்.ஏழைகள் இருக்கும் இடம் நாடிச் சென்று அன்னதானம் செய்யும் அரிய வழியை இவர் நாட்டினார். உலகப் புகழ்பெற்ற திருக்குறள் என்னும் வாழ்க்கை விளக்க நூலை ஸெளராஷ்ட்ர மொழியில் கவிஞர் சங்குராம் என்னும் ஸித்தாச்ரம அன்பரைக் கொண்டு தயாரிக்கச் செய்து பிரசுரித்து விழா எடுத்து வெளியிட்டு உலகளாவிய ஒரு பெருமையை ஸெளராஷ்ட்ர ஸமூகத்திற்கும் ஸெளராஷ்ட்ர மொழிக்கும் பெற்றுத் தந்த பெருமகனார் பூஜ்யஸ்ரீ ஸித்த குரு ஸ்வாமி என்பது உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை.

'செய்வன திருந்தச் செய்தல்' என்பது சுவாமிகள் கடைப் பிடித்த கொள்கைகளில் ஒன்று - நூல் பிரசுரங்களின் போது இது தெற்றென - தெளிவாக விளங்கியது.'எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே!' என்ற தாயுமானவர் கொள்கையைச் சிக்கெனப் பிடித்தவர் ஸ்ரீ ஸித்த நரஹரி சுவாமிகள்.

பற்று அற்றான் பற்றை மட்டும் பற்றினார் - பிற பற்றுகளையெல்லாம் அறவே ஒழித்தார்.

குரு காணிக்கை, நன்கொடை முதவியவைகளுக்கு தாமே ஒரு டிரஸ்டியாக இருந்துசிக்கனமாக - சிறப்பாகப் பயன்படுத்திப் பாதுகாத்து ஆச்ரமத்துக்கே விட்டுச் சென்றுள்ளார்.

1997 பிப்ரவரி 23ல் அவர் பூத உடல் மறைந்தாலும் புகழ் உடம்பில் நம்முடன் வாழ்கின்றார் - நம்மை வழி நடத்திச் செல்கின்றார். ஸித்தாச்ரம வளாகத்தில் ஸித்த குடீரத்தில் அமைந்த பிருந்தாவனத்தில் அவரைத் தினமும் சேவிப்போம் - அவர் வழி நடப்போம்- அமர நிலை பெறுவோம் - ஓம்

ஸித்த நரஹரி சீர்பாதம் நேர்ந்திடவே நித்தம் குருஹரி உயரும் நிலை

திரு K.ராமநாதன் அவர்களுக்கு நன்றி


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube