முன்னுரை
நடனகோபாலற்கு நாயகி யான் என்றே நடனமுங் கீர்த்தனமெந்நாளும் உடனிகழ்த்தி ஊரை
அலங்கரித்த உத்தமனின் உயர்வை உன்னுவாம் பெருமையைப் பேசுவோம்.
அலங்கரித்த உத்தமனின் உயர்வை உன்னுவாம் பெருமையைப் பேசுவோம்.
ஸம்ப்ரதாயத்தி லாழ்ந்து பேரின்பம் அனுபவித்தவர்கள் ஆழ்வார்கள். நம்மாழ்வாரும்,
பெரியாழ்வாரும் அவதரித்த பாண்டி நாட்டிலே, சங்கம் அமைத்து செந்தமிழ் வளர்த்த சீர்மிகும்
மதுரையம்பதியில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் சௌராஷ்ட்ர சமூஹத்தில் தோன்றி, ஸத்குருவின்
உபதேசத்தால் திருமாலின்திருவருளில் திளைத்து,இன்னிசைத் திறத்தால், பரந்தாமனையே பாடிப்
போற்றி மரணமிலாப் பெரு வாழ்வினை எய்தியவர் மதுரையின் ஜோதியெனப் போற்றப்படும்
ஸ்ரீமந் நடன கோபால நாயகி ஸ்வாமிகள்.
தம் அருளாலும், அனுபவத்தாலும், ஆன்மீகச்சுடரை எங்கும் பிரகாசிக்கச் செய்த இம்மகானின்
தோற்றத்தால் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரும் நம் ஆலவாய்த் திருநகரில் அவதரிக்க வில்லையே
என்ற குறை நீங்கியது. இதனால் ஸெளராஷ்ட்ர ஆழ்வார்,மதுரை ஆழ்வார் என்றெல்லாம் இவர்
போற்றப்படுகிறார். இவர் தம் அனுபூதியால் அகிலத்திலுள்ளோர் அனைவரும் வாழ் வாங்கு
வாழ்ந்து பேரின்ப நிலையைப்பெற அருளியுள்ளார்.
உலகில் பிறந்த அனைவரும் நலமுடன், வளமுடன், நிரந்தர சுகமுடன் வாழவே விரும்புகின்றனர்,
அதையே நாடுகின்றனர், தேடுகின்றனர்,பாடு படுகின்றனர். ஆனால் உலகில் ஒவ்வொருவரும்
அனுபவிக்கும் ஆனந்தம் பூரணமாக இருப்பதில்லை, கணத்தில் மறைந்தும் விடுகிறது.
சுகம் லோகுர் கொட்டி தெக்கானி ஏ இவ்வுலகில் நிரந்தர இன்பம் எங்கும் காணோமே என்று
நாயகி ஸ்வாமிகள் நவின்றுள்ளார். பின் துன்பம் கலவாத இன்பத்தைப் பெற வழியாது?
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
தனக்குவமை இல்லாத தனிப்பெரும் தலைவனை, பரமனைப் பெற கர்மம், பக்தி, யோகம்,ஞானம்
போன்ற வழி முறைகளை அருளாளர்கள் வழி வகுத்துக் கொடுத்துள்ளனர்.அவ்வனைத்திலும்
அனைவர்க்கும் ஏற்றது, எளியது பக்தி மார்கமே.
நவவித பக்தி என்றால் என்ன ?
ஸா பரானுரக்தி: ஈச்வரே இறைவனிடம் வைக்கும் பரம பிரியமே பக்தியென்று மஹரிஷி
சாண்டில்யர் மொழிந்துள்ளார்.அகில நாயகனையும் அடியார்களையும் காணும் போதும்,
ஸர்வேச்வரனின் திரு நாமங்களையும்,திவ்ய லீலைகளையும், அருள் மொழிகளையும் கேட்கும்
போதும் பாடும் போதும், நினைக்கும் போதும், உள்ளம் உருகி, குரல் தழுதழுக்கக் காதலாகிக்
கசிந்து, கண்ணீர் மல்கி, மெய்ம் மறந்து இருப்பது பக்தி நிலையாகும். அவனியில் அல்லலறும்
ஒப்பற்றசாதனம் பக்தியாகும்.
புராண திலகம், வைஷ்ணவானாம் த4னம்.
என்றெல்லாம் போற்றப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பிரஹலாதன் நவவித பக்தி நிலையைப்
பகர்ந்து உள்ளான்.
'சிரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாதஸேவனம்
அர்ச்சனம் வந்தனம் தா3ஸ்யம் ஸக்2யம் ஆத்ம நிவேத3னம்'
என்று பகவானின் திருநாமங்களை, திவ்ய கல்யாண குணங்களை,திவ்ய லீலைகளை, திவ்ய
சரித்திரங் களை, மஹாத்மியங்களை, தத்துவங்களைச் சிரத்தையுடன், அன்புடன் கேட்பது, சிரவண
பக்தியாகும், அவற்றைப் பாடுவது கீர்த்தன பக்தியாகும், பரந்தாமனையே மனதில் எப்போதும்
நினைப்பது ஸ்மரண பக்தியாகும்.
ஸ்மரணபக்தி
காதலுடன் கண்ணன் போதனை செய்யும்
கருணை வசனம் கேளாச் செவிகள் - ஐம்
பாதக ஸ்ரேஷ்டர்கள் வாசம் செய்யும்
பொல்லாப் பாழ் வீட்டின் சாளரச் செவிகள்
கண்ணன் அன்புடன் கூறும் அறிவுரைகளைக் கேளாச் செவிகள் உண்மையில் செவிகளன்று. பஞ்ச
மஹா பாதகங்களைச் செய்யத்தூண்டும் ஐந்து இந்திரியங்கள் வாழும் பாழடைந்த
வீட்டின்ஜன்னல்களாகுமென
சுவாமிகள் சாற்றியுள்ளார்.
கலௌ நாம ஸங்கீர்த்தனம் கலியுகத்தில் கடவுளின் திருநாமத்தை பக்தியுடன் கீர்த்தனை
செய்தாலேயே முக்தி பெறலாம்.
பரம்பொந்து3னொ மெனெதி 3 ப4க்தி ஸெந்தோ
பஜனான் கர்னோ இக பர சுக2 முனப்3பை3
முக்தி நிலை பெற வேண்டுமாயின் பக்தியுடன் பரமனைத்துதி, இம்மையிலும், மறுமையிலும் சுகம் பெறலாம் என்றும்
நிச்சு ஸ்ரீஹரி ப4ஜன கார் மொந்நு நீ: து3ஸ்ர வாட் மோக்ஷிக் ஹே மனமே! நீ நாள் தோறும்
ஸ்ரீஹரியை பூஜிப்பாய். இதைத் தவிர முக்தி பெற வேறு வழியே இல்லை என்றும்
நடன கோ3பாலுக் க3வ்னாஸ்தெனொ நஜ்ஜாய் நஜ்ஜாய் நஜ்ஜாய்' நடன கோபாலனைத் துதித்துப்
பாடாதவன் அழிவது உறுதியென அறுதியிட்டும் சுவாமிகள் அருளுகின்றார்.
உலகுண்ட பெருவாயனைப் பாடிடாத வாய்
உயிரை மாய்த்திடும் ஸர்ப்ப பி3லமே'
உலகுண்ட உத்தமனைப் பாடாத வாய் உயிரையே அழிக்கக் கூடியகடும் விஷங்கொண்ட பாம்புகள்
வாழும் பொந்து என்று திருநாமம் பாடாத வாயைப் பழிக்கின்றார். பாடினால் மட்டும் போதுமா ?
அல்லும் பகலும் ஆண்டவனின் நினைவு அகலாதிருக்க வேண்டும் என்கிறார் நம் சுவாமிகள்.
அனன்யாச் சிந்தயந்தோ மாம் யே ஜனா: பர்யுபாஸதே
தேஷாம் நித்யாபி4யுக்தானாம் யோக3க்ஷமம் வஹாம்யஹம்
அனன்ய பக்தியுடன், என்னைத்தவிர வேறு எதையும் எண்ணாமல் என்னையே நினைத்தும், எங்கும்
என்னையே பூஜிக்கும் நித்தியயோகிகளுடைய யோக க்ஷேமத்தை நான் வழங்குகிறேன்,என்றுஸ்ரீமத்
பகவத் கீதையில் பரந்தாமன் பார்த்தனுக்கு பகர்கின்றார்.
நிச்சு ராதி3 தீ3ஸ§மு தொரத்4யானு தே3 ராக4வேந்த்3ரா' நாள்தோறும் இரவும், பகலும் உன்னுடைய
சிந்தனையே எனக்கு அருள வேண்டும் என்று சுவாமிகள் பிரார்த்திக்கின்றார்.
ஹுடினும் பி3ஸினிம் சல்னிம் ஹோங்கு3ம்
நடனகோ3பால் த்4யான் ஸொண்ணகோ
எழுந்திருக்கும் போதும், உட்காரும் போதும், நடக்கும் போதும், உறங்கும் போதும், இவ்வாறு எந்த
செயலையும் செய்யும் போதும் நடனகோபாலனின் தியானத்தை விட்டு விடாதே என்றும்
உபதேசிக்கின்றார்.
தெய்வத்தின் திருவடி ஸேவை செய்வது பாத ஸேவன பக்தி என்றும், தூமலர்த் தூவித் தொழுவது
அர்ச்சனமென்றும்,திருவடி களை வணங்குதல் வந்தனமென்றும், குற்றேவல் புரிவது தாஸ்ய
பக்தியென்றும், தோழமை கொள்ளுதல் ஸக்ய பக்தி என்றும் உரைக்கப்படும்.
திருவடி சேவை
காலைப் பிடித்தே வருடா கைகள் இருந்தென்ன'
கைங்கர்யம் செய்திடவன்றோ கண்ணன்
நமக்குக் கைகளைத் தந்தான் மெய்யே
என்று கூறி ஸேவை செய்வதற்கே கரங்கள் கொடுக்கப்பட்டதாக சாற்றுகிறார்.'
புண்டரிகாக்ஷுடுக் பூ2ல் புஜெ கார் மொந்நு' புண்டரிகாக்ஷனை அழகிய மலர்களால் அர்ச்சிப்பாய் என்கிறார்.
சிடி ஹுடி ஜெய் ஜா:ட் முடி3 பொடி3 ஜானாமுல்லாம்
ஹொடி மொவெ தே3வு பாயிர் பொடி3 ஜிவ்லுவோ
உயிர் பிரிந்து உடல் விழுமுன் திரிவிக்ரமனாய் மூவுலகும் அளந்த,திருமாலின் திருவடிகளை
வணங்கி உய்வாய்,என சுவாமிகள் உய்யும் மார்க்கத்தை உணர்த்துகிறார்.
பாதங்களிலே வீழ்ந்து பணிந்திடா சென்னி
பாவ மிருகங்கள் வாழ் கிரியே
திருவடிகளை வணங்காத தலை தலையல்ல, பின் யாதெனின் கொடிய மிருகங்கள் வாழும்
மலையென சுவாமிகள் பழிக்கிறார்.
திருவடிகளில், வெட்டப்பட்ட மரம் போன்று விழுந்து வணங்கு வதால் முன்வினை அனைத்தும்
அகன்று போகும் என்பதை
கடெ ஜா:ட் ஸொக3 போடி3 புள்ளோ கரே
கருமு ஜாய் பாய்ம் போடி3
என்று குறிப்பிடுகிறார்
தாஸ்ய பக்தி
பரந்தாமனே சுவாமி, தீனதயாளன், நான் அவனுடைய தாஸன். ஸேவகன் என்ற பாவனையுடன் பல
கீர்த்தனைகளை சுவாமிகள் அருளியுள்ளார்.
மீ மெனஸ்தே மமத ஹோனா
மீ தா3ஸ் மெனஸ்தெ ஹட்3வன் ஜான் ஹோனா
நானெனும் அகங்காரமும், எனதென்ற மமதையும் அகற்றி நான் பகவானின் தாஸன் என்ற எண்ணம்
மறவாதிருக்க வேண்டும் என்கிறார்.
முராரி தா3ஸுனுக் தா3ஸொ:ய்லுவோ கோ3விந்த3
தா3ஸுனுக் தா3ஸு ஹொயி தூ கேசவா ஹரி ப4ஜன காரி
எம்பெருமானுக்கு தாஸனாக, அடிமையாக இருப்பதோடு அகிலாண்ட நாயகனின் அடியார்களுக்கும்
தாஸனாக இருந்து கொண்டு பகவத் கைங்கர்யத்துடன் பாகவத கைங்கர்யமும் செய்ய வழி
காட்டுகின்றார். தயாபரனைத் தாயாகத் தந்தையாகக் கருதி அன்பு செலுத்து கின்றார்.
மாய் பா3ப் கு3ரு தே3வ் அஸ்கி தூஸ் மொகொ3 ராக4வேந்த்ரா ஹே ராகவேந்த்ரா!
நீ தான் எனக்குத்
தாயும் தந்தையும் , என் ஆசானும் நீ, ஆண்டவனும் நீ என்கிறார்.
'பிதாமஹஸ்ய ஜக3தோ மாதா தா4தா பிதாமஹ,'
உலகனைத்திற்கும் நான் தான் அன்னையாக,
அப்பனாக, பாட்டனாக,அனைத்தையும் தாங்குபவனாக இருக்கிறேன் எனக் கீதையில் குந்திலாலுக்கு
நந்தலால் நவின்றுள்ளார்
நம் நாயகி சுவாமிகள் கண்ணனைத் தன் குழந்தையாகக் கருதித் தாயின்
வாத்ஸல்யத்தைக் காட்டுகின்றார்.
பசியுடன் எவ்விடம் கோபாலன் இருக்கிறானோ என்கண்ணன் பசி தாங்க மாட்டானே !
கட்டித்தயிரும், கனிந்தகனியும், பாலும், வெண்ணெய்யும் உடனே கொண்டு போய்க் கொடுக்கும்
படியும், கண்ணேறு படும்படி எவ்கெங்கு அலைகிறானோ ? காண்பவர் கண்ணைக் கவரும்
கார்முகில்வண்ணன் எங்கெங்கு திரிகிறானோ, யாருடைய திருஷ்டியும்அவன்மீது படக்கூடாதே
என்றெல்லாம் கூறுகின்ற பாடல்கள்சுவாமிகளின் தாய்மையின் வாஞ்சையை வடிவெடுத்துக்காட்டுகின்றன.
மற்ற ஆழ்வார்கள் காட்டாத பாவனையை நம் நாயகி சுவாமிகளிடம் காணலாம். ஆம் தம்மையே
கண்ணனாகக் கருதி பாடுகின்றார்
நீ:ஸ்தெ வத்தான் கம்சிலவ்ரி:யாஸ்வோ அம்பொ3 மொக
கா2ஸ்தக் லொனி தூ தே3ரெஸ்தா2ம் உன்ன காய் ஸேவோ
அம்மா ! நீ எனக்குக் கொடுக்கும் வெண்ணெய்க்கு அளவேது ? அவ்வாறிருக்க அவர்கள் வீட்டில்
நான் வெண்ணெய் திருடினேன் என்று இல்லாத, பொல்லாத வார்த்தைகளைக் கோபியர்
கூறுகின்றனரே ! என்கிறார்.
.
நாயகி பா4வம்
இவ்வாறுபற்பல நிலைகளில் பக்தி செலுத்தும் நாயகி சுவாமிகளிடம் மேலோங்கி நிற்பது ஆத்ம
நிவேதனமாகும் அனைத்தையும் தியாகம் செய்து பகவானின் பாதாரவிந்தங்களில் தம்மை
முழுவதும் அர்ப்பணிப்பது ஆத்ம நிவேதனமாகும். தம்மை நாயகியாகவும், பகவானை
நாயகனாகவும் பாவித்தார். இந்த நாயகி பா4வமே
மாது4ர்ய பா4வம் பிரேம பா4வம் ' என்றெல்லாம் சொல்லப்படும்.
நான் மாடக்கூடலில் அவதரித்த நம் நாயகி ஸ்வாமிகள் ராமபத்ரன் என்ற இயற்பெயருடன்
வளர்ந்தார். உலக வாழ்வில் நாட்டமின்றி இளமையிலேயே இல்லறம்துறந்து, பன்னிரு ஆண்டுகள்
அருந்தவம் புரிந்து கந்தனின் கருணையினால், நாகலிங்க அடிகளை குருவாகக் கொண்டு, அஷ்டாங்க
யோகம் பயின்று , சதானந்த சித்தர் என்ற பெயருடன் சிவராஜ யோகத்தில் சிந்தை மகிழ்ந்திருந்தார்.
பல திருத்தலங்களுக்குச் செல்கையில் ஸ்ரீ வைஷ்ணவர் களின் இராஜதானியும், நம்மாழ்வார்
அவதரித்த திருத்தலமாகவும் இலங்கும் ஆழ்வார் திருநகரியை அடைந்த போது சுவாமிகளின்
வாழ்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. அங்கு சிறந்த வைஷ்ணவ ஆசாரியரான
வடபத்ராசாரியரால் ஈர்க்கப்பட்டு, சுவாமிகள் அவரையே ஸத்குருவாகக் கொண்டு த்வாதச நாமம்
தரித்துக் கொண்டு,தூய வைஷ்ணவராகி,நடனகோபால ஸ்வாமிகள் எனும் திரு நாமத்தைப்
பெற்றார்
திருமழிசைப்பிரான் முதலில் சிவபக்தராக இருந்து பின் விஷ்ணு பக்தரானது போல் நம் ஸ்வாமிகள்
சிவராஜ யோகத்திலிருந்து மாறி மாதவ ராஜ யோகத்தில் தன்மயமாயினரர். திருமந்திரம், த்3வயம்,
சரம சுலோகம், தமிழ் வேதமான நாலாயிர தி3வ்ய ப்ரபந்தம் ஆகியவற்றை குருநாதரிடம்
உபதேசமாகப் பெற்று விசிஷ்டாத்வைதத் திலே மனம் ஈடுபட்டு தாமோதரனுக்குத் தன்னைப்
பரிபூரணமாக அர்பணித்துக் கொண்டார். குருவின் திருவருளால் ஹரியின் திருவருளைப் பெற்றார்.
திருமாலைத் தவிர இல்லை வேறு தெய்வம்
ஹரி விநா தே3வ் நீ: என்ற உறுதியுடன் மீண்டும் தல யாத்திரை
மேற்கொண்டார்.
ஆண்டாள் பிராட்டியாரின் திருவவதாரத் தலமாகிய ஸ்ரீவில்லிபுத்தூரை அடைந்தார்.
கண்ணனிடம் தீராத காதல் கொண்டு பூமாலை சூட்டி, பாமாலை பாடி, திருமாலைக் கரம் பற்றியசெல்வக் கோதை
ஆண்டாளின் ஸந்நிதானத்தில் ஸேவித்து நின்றார். ஆண்டாளின் பக்தியுணர்ச்சி, காதல் வேகம்
நமது சுவாமிகளின் உணர்ச்சிப்பெருக்கைத் தூண்டியது.
அடையுங்கள் அடையுங்கள் ஆண்டாள் திருவடி அடையுங்கள், என்று அருகிலிருந்தவர்களைக்
கூவிஅழைக்கிறார். கோதை நாச்சியாரின் நாயகி பக்தியுணர்வில் உள்ளம் பறி கொடுத்த சுவாமிகள்
தம்மைக் கண்ணனுடன் உறவு கொள்ளத்துடிக்கும் நாயகியாகக் கருதினார். கூடல் நகர்க் கோதையாக
ஆலவாய் நகர் ஆண்டாளாக வாழ்ந்தார்.
நாயகிபா4வ பக்திமுறை நம் நாட்டில் பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது. எம்பெருமானைத் தன்
பதியாக ஏற்ற பெண்டிரும் உண்டு. பிறப்பால் ஆணாக இருப்பினும்,எண்ணத்தால் பெண்மையை
ஏற்று இறைவனிடம்¢ ஒன்றிய ஆண்மக்களும் உண்டு. வடநாட்டில் மேவாரில் வாழ்ந்த மீரா 'ஹரியே
என் மணாளன்' என்று கூறி நாராயணனையே நாயகனாகக் கருதி பூஜித்தாள். கோதை நாச்சியாரோ'
மானிடர்க்கெனப் பேச்சுப்படில் வாழக்கில்லேன் கண்டாய் ' என்று கூறி,மானிடர்க்கு வாழ்க்கைப்பட
மறுத்து,திருவரங்கனையே கலந்தாள். திருமாலின் மேனி அழகில் உள்ளத்தைக்
கொள்ளைக் கொடுத்த நம்மாழ்வார், திருமாலின் காதலியாக மாறி பராங்குச நாயகியானார். திருமங்கையாழ்வாரும்
பரகால நாயகியாகத் திகழ்ந்தார்.
நம்மாழ்வார் திருமங்கையாழ்வார், மீரா ஆண்டாள் ஆகியோரின் மாதுர்ய உபாஸனையால்
கவரப்பட்ட நம் நாயகி சுவாமிகளும் அவர்களையே பின்பற்றி எம்பெருமானாகிய ஸ்ரீமந்
நாராயணனிடம் பிரேமை கொண்டு அவரையே நாயகனாகக் கருதி ஆடிப் பாடினார். தாம்மட்டுமல்ல
'ஜீவாத்ம கோடிகளெல்லாம் ஸ்திரி பிராயம் ' என்றார். புருஷோத்தமனாகிய
எம்பெருமானின் பேராண்மைக்கு முன் உலகம் முழுவதும் பெண் தன்மையுடையதாய்,
சுதந்திரமற்றதாய், பரதந்திரபட்டதாய் இருக்கிறது. பெண்ணொருத்தி ஆண்மகனின் துணையின்றி
நலமுடன் வாழ இயலாது. அவ்வாறே ஜீவாத்மாவும் பகவானையே சார்ந்து தான் நிற்க முடியும்,
வாழமுடியும். எனவே உலகிலுள்ள அனைவருமே பெண்கள் தாம். பரமாத்மா ஒருவனே புருஷன்,
அவன் தான் புருஷோத்தமன், எங்கும் நிறைந்த பரிபூர்ணமாயிருப்பதால் புருஷன் என்று புகலப்படுகிறான்.
யஸ்மாத் க்ஷரமதீதோஹம் அக்ஷராத3பி சோத்தம:
அதோஸ்மி லோகே வேதே3 ச ப்ரதி3த: புருஷோத்தம:
அழிகின்ற பிரபஞ்சமாகிய க்ஷரத்திற்கும்,அக்ஷரமெனக் கூறப்படும். மாயைக்கும்
அப்பாற்பட்டவனாய் அனைத்திலும் மேலானவனாக தானிருப்பதால் உலகிலும்,வேதத்திலும்
புருஷோத்தமன் என்று புகழ் பெற்றிருக்கின்றேன்,' என்று கீதையில் கண்ணனே காண்டீபனுக்குக்
கூறுகின்றார்
பரந்தாமன் நம்மைக் காப்பதாலும், போஷிப்பதாலும்,பதி ப4ர்த்தா என்றெல்லாம் போற்றப்படுகிறார்.
நம்மை வழி நடத்திச் செல்லும் தலைவனாக இருப்பதால் நாயகனென நவிலப்படுகிறார்.
அம்ருத சொரூபியான அந்த அழிவற்ற நாயகனை அடைவதற்கே ஆண்டாள் பாவை நோன்பு
நோற்றாள்.ஸ்ரீவில்லிப்புத்தூரையே ஆயர்பாடியாகவும், தோழியரை ஆயர்குலமங்கையராகவும்,
வடபத்ரஸாயியை கண்ணனாகவும் கருதி வழிபடுகிறாள்.
கூடியிருந்து குளிர்ந்தேலோரெம்பாவாய் ' என்று கண்ணனாகிய தடாகத்தில் நீராட அனைத்து
தோழியர்களையும் அன்புடன் அழைக்கிறாள். அவ்வாறே நம் நாயகி சுவாமிகளும்,
ஹரி ஹரி மெனிகின் மென்னோ அமி ஸத்பத3வி பொந்து3னோ
ஸ்ரீ ராமா மெனிகின் ஸிங்கார் ஹொயே ப4ஜனானு கர்னோ
அவ்டுவொ தா3ஸுன் துமி அவ்டுவொ தா3ஸுன்
ஸ்ரீராமா, கிருஷ்ணா என்றெல்லாம் திருநாமங்களைப்பாடி, நற்கதியைப் பெற, அடியார்களே
வாருங்கள் வாருங்கள், என அன்புடன் அனை வரையும் அழைக்கிறார் ராமன் என்ற சொல்லிற்கே
அனைவரையும் ஆனந்தத்தில் ஆழ்த்துபவன் என்று பொருள். அனைவரையும் தன்பால்
ஈர்த்து,மனதைப் பண்படுத்தி,பாபங்களைப் போக்கிஆனந்தத்தை அருள் பவன் என்பது கிருஷ்ணன்
என்ற சொல்லின் பொருளாகும்.
தி3வ்யம் தி3வ்யம் தி3வ்யம்,தி3வ்யம்3
தே3வு நமமூஸ் த4ரீர் '
இறைவனின் திருநாமங்கள் அனைத்துமே தெவிட்டாத தெள்ளமிதமென பல கீர்த்தனைகளில்
திருநாமங்களின் இனிமையை, பெருமையைப் புகலுகிறார்.
ஜிஹ்வே கீர்த்தயே கேசவம் ' நாக்கே! கேசவனைத் துதித்துப் பாடு, என்கிறார் குலசேகராழ்வார்.
கோ3விந்த3 நம்மூஸ் கு3ள்ளே பொள்ளொ-க2ள்ளி க2வகா தா3ஸுன் துமி
கோவிந்த நாமத்தை சுவைத்துப் பார்த்தேன், அடியார்களே! பழச்சுவை போன்ற அதன் இனிமையை
நீங்களும் சுவைத்துப் பாருங்கள், என்றழைத்து சுவாமிகள் தாம் பெற்ற இன்பத்தை அனைவரும் பெற
வேண்டுமென்ற பரந்த மனப்பான்மையினால் அனைவரையும் அழைக்கிறார்.
ஸதா ஸர்வ காலமும் மணிவண்ணனையே நினைந்து, நினைந்து, நெகிழ்ந்து, நெகிழ்ந்து, ஆடி ஆடி
அகங்கரைந்து, பாடிப் பாடி கண்ணீர் மல்கி, எங்கும் நாடி நாடி நாராயணா என்று பாடுவதையே
பெரும் பேறாகக் கொண்டு வாழ்ந்தார்.ஆராவமுதனான ஆயர்பாடிக் கண்ணனிடம் தீராத காதல்
கொண்ட நம் சுவாமிகள் நாயகி பா4வத்தில் ஆடிப்பாடுதல் மட்டுமின்றி, நடை,உடை,
மொழிகளாலும் பெண்ணாகவே மாறினார்.
ஒருமுறை திருபுவனம் என்னும் ஊரில் குழந்தைச் செல்வத்திற்காக ஏங்கிய ஓர் ஆசார சீல திவ்ய
தம்பதியர்க்கு, நம் சுவாமிகளின் அருளால் குழந்தை பாக்கியம் கிடைத்தது. அகமகிழ்ந்த
அத்தம்பதியர் சுவாமிகளுக்குப் புடவை, ரவிக்கை,மஞ்சள், குங்குமம், வளையல்,சலங்கை,
ஆகியவற்றை அன்புடன் அர்ப்பணித்தனர். உள்ளத்தில் மட்டுமல்ல, தோற்றத்திலும் பெண்ணாய்
மாறும்படி செய்தது திருமாலின் திருவருள் போலும் என்றெண்ணி சுவாமிகள் ஆபரணங்களை
அணிந்துகொண்டு, சேலையை உடுத்திக் கொண்டு, மஞ்சள் பூசிக்கொண்டு, நாச்சியாரைப் போன்று
கொண்டை யிட்டு,கால்களில் சலங்கை அணிந்து, கண்ணனின் கல்யாண குணங்களில் ஈடுபட்டு
தம்மையே மறந்து அல்லும் பகலும் அபிநயித்து அந்தரங்கத்திலிருக்கும் அந்த ரங்கனைப் பாடியாடி
பரவஸமுற்றார். பூலோக வைகுண்டமாகத் திகழும்ஸ்ரீரங்கத்திலுள்ள பள்ளி கொண்ட பெருமாளின்
அழகில் மனதைப் பறி கொடுத்த நாயகி சுவாமிகள்,
க3வெதி ஸ்ரீரங்கா3க் க3வ்னோ
பொ3வெதி ஸ்ரீரெங்கா3க் பொவ்னோ
ஸியெதி ஸ்ரீரெங்கா3க் ஸனோ
அமி ஜிவெதி ஸ்ரீரெங்கு3மூஸ் ஜிவ்னோ
பாடினால் திருவரங்கனையே பாட வேண்டும், அழைத்தால் திருவரங்கனையே அழைக்க வேண்டும்,
பார்த்தால் திருவரங்கனையே பார்க்க வேண்டும், வாழ்ந்தால் திருவரங்கத்திலேயே வாழ வேண்டும்
என்கிறார். என் அமுதினைக் கண்ட கண்கள் அமுத சொரூபியான திருவரங்கனைக் கண்டபின்
வேறொன்றையும் காண கண்கள் விரும்பாவென' திருப்பாணாழ்வார் அருளியுள்ளார்
தமது ஒவ்வொரு நாடியிலும், நரம்பிலும் நாயகி பா4வமே நிறைந்திருக்கக் கனிந்து, உருகி, நாயகி
பா4வமே ஒரு வடிவெடுத்ததுபோல் திகழும் சவாமிகளைக் கண்ட ஸ்ரீரெங்கராமானுஜ ஜீயர்
சுவாமிகள், அவருக்கு 'நாயகி ' என்ற பட்டத்தைச் சூட்டி நடனகோபால நாயகி ஸ்வாமிகள் என
அழைத்து ஆசிர்வதித்தார்
ஆழ்வார்கள் ஞானத்தில் தன் பேச்சும், பிரேமத்தில் பெண் பேச்சும் பேசுகிறார்கள் என்று 'ஆசார்ய
ஹிருதயம் ' என்னும் நூல் கூறுகிறது. இதனை மணிவல்லிப் பேச்சு என்று வைணவர்கள் குறிப்பிடுகின்றனர்.
அவ்வாறே நாயகி சுவாமிகளும் மணிவல்லிப் பேச்சு பேசுகிறார். அகத்தில் மட்டுமன்றி,
புறத்திலும் தம்மை நாயகி ஆக்கிக் கொண்ட பெருமை நம் சுவாமிகளையே சாரும். நாயகி
நிலையிலிருந்து தீந்தமிழில் பாடிய அகத்துறைப் பாடல்கள் உணர்ச்சி மிக்கதாயும், தத்துவம்
செறிந்ததாயும், இலக்கிய வளம் நிறைந்தநாயும், பிராஸ நயம் சொல் நயம், பொருள் நயம்
கொண்டதாயும் உள்ளன.
அக இலக்கியங்கள் காதலை மிகைபடச் சித்தரிக்கும். ஆனால் சமய இலக்கியங்களில் காதலுக்கும்
பக்தியே மூலகாரண மாகிவிடுகிறது. இங்கு குறிப்பிடப்படும் காதல் பகவத் விஷய காமமேயன்றி
விஷய காமமன்று. இது அலௌகிக காமம். இது படிப்பவர்களுக்கு தெய்வீக உணர்ச்சியை உண்டாக்குகிறது.
நாயகி சுவாமிகளும் தம் கீர்த்தனங்களில் சிற்றின்பம் போன்று புறத்தே தோற்றம் தரும்
முறையில் பேரின்பத்தைக் காட்டுகின்றார்.
அகத்துறைப் பாடல்களில் ஸம்போக சிருங்காரமும்,விப்ரலம்ப சிருங்காரமும் இடம் பெறும்.
தலைவனும் தலைவியும் இணையும் போதும்,பிரியும் போதும் ஏற்படும் உணர்ச்சிகள், சொல்லும்
வார்த்தைகள் விளக்கப்படுகின்றன. நாயகி சுவாமிகளின் கீர்த்தனைகளில் அதிகமாக தலைவனைப்
பிரிந்து வாடும் தலைவியின் நிலை வர்ணிக்கப்படுகிறது.பிரிவுத்துயரில் வாடும் தலைவி
தலைவனுடன் சேர்ந்திருந்த நிகழ்ச்சிகளைத் தோழியரிடம் கூறுகிறாள். தலைவனின் அழகை
வர்ணிக்கிறாள்.
ஸெளந்தர்ய ஸாகரமாக விளங்கும் அச்சுதனின் அழகை அழகோவியமாக
சுவாமிகள் வரைகின்றார்
அவன் மோஹன ரெங்கனடி
சொக்குதே சொக்குதே கிருஷ்ணன் தோளழகிற்றோழி
தோளழகென் சொல்வேன் மார்பழகென் சொல்வேன்
தூ முறுவலின் அழகது என் சொல்வேன்
திருமாலிருஞ்சோலை அழகா அழகா
திருவடி தா அழகா.
ஓராயிர நாமா அழகா அழகா
வாராயென் அழகா'
'பரிமேல் வரும் அழகா
நாயகி சுவாமிகள் அழகிய மணவாளரின் அழகை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது போனதால்
பதத்திற்கு பதம் அழகா அழகா என அழைத்து அக மகிழ்கிறார்.
'என் அரங்கத்து இன்னமுதர் குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில்
எழு கமலப்பூ அழகர் '
என நாச்சியாரும் அரங்கனின் அழகை வர்ணித்துள்ளார்.
பச்சை மாமலைப் போல் மேனி பவளவாய் கமலச்செங்கண் அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே
என்று தொண்டரடிப் பொடியாழ்வாரும் வர்ணித்துள்ளார் அல்லவா ! எம்பெருமானின்
திருமேனியழகை வர்ணித்த நாயகி சுவாமிகள் பக்தவத்ஸலனின் புகழைப் பாடி பரவசமடைகிறார்.
நரசிங்கமான ஸ்ரீமந் நாராயணன், பக்தவத்ஸலன்,பரமபத நாதன், காளிங்க நர்தனமாடியவன்,
உலகளந்த திருவடியுடையோன்,ததி பாண்டவனுக்கு மோக்ஷமளித்த தயாமூர்த்தி,அகலிகை
சாபமகற்றியவன், திரௌபதியின் மானங்காத்தவன், கஜேந்திரனுக்கு அபயமளித்தவன்,
என்றெல்லாம் போற்றி துதிக்கிறார்.
நாஹம் வஸாமி வைகுண்டே ந யோகி3 ஹ்ருத3யே
மத்3¢பக்தா: யத்ர கா3யந்தி தத்ர திஷ்டாமி
நான் வைகுண்டத்தில் மட்டுமோ, யோகிகளின் ஹிருதயத்தில் மட்டுமோ இருப்பதாக பலர்
எண்ணுகின்றனர். என் பக்தன் எங்கு என்னை எண்ணிப் பாடுகின்றனரோ அங்கிருக்கிறேன் என்று
பக்த பராதீனனான பார்த்த ஸாரதியே பகர்ந்துள்ளதால் நாயகி சுவாமிகளும் 'தொண்டருளமே
கோயிலாகக்கொண்டவன் ' என போற்றுகிறார்.
தம்மைவிட்டுப் பிரிந்து சென்ற கண்ணனைக் காணாது துயருற்ற நாயகியின் விரக தாபத்தை
உணர்த்தும் பாடல்களும், கருணைக் கடலான கண்ணனின் இரக்கமற்ற தன்மையைச் சுட்டிக் காட்டும்
பாடல்களும் கண்ணா, நீ மனம் இரங்கமாட்டாயா என்று கெஞ்சும் பாடல்களும், தோழியைத் தூது
விடும் பாடல்களும் நாயகி பா4வத்தை உணர்த்தும் சொல்லோவியங்களாக விளங்குகின்றன.
உறவுகளிலே மிகச்சிறந்த உறவு நாயக நாயகி உறவு. நாயகி மிக உரிமை யுடன் நாயகனிடம்
பேசுகிறாள்.தாமோதரன் தன்னை விட்டுப் பிரிந்து சென்ற போதும், தன்னெதிரில் இருப்பதாகவே
கருதி நாயகி சுவாமிகள் நவிலுகின்றார்.
ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா மீ ஸெஜ்ஜெ கே3ர் கெரி நா:
தொர கொ4ம்மா தெனோஸ் மீ ஸெய்லே
ஸெய்லே ஸிள்ள தொ3ளஹோர்
ஸ்ரீகிருஷ்ணபரமாத்மாவே ! நான் அடுத்த வீட்டுக்காரியல்ல, உன் வீட்டுக்காரி, உன் மனைவியே
நான்.உன் குளிர்ந்த திருநோக்கால் என்னைப்பார், என்று வேண்டுகிறார்.
என்ன கோபமோ ? இன்னும் மன்னவா ஸ்ரீகிருஷ்ணா இரட்சிக்க நினைவில்லையோ ? இன்னும்
கோபம் தீரவில்லையா ? கருணையுடன் காக்க மனம் வைக்க மாட்டீரா என்று கெஞ்சுகிறார்.
கொரி மீ பொ3வரேஸ் தொக ரகு3நாதா2 - தூ
பி2ரி ஸானா ரி:யெஸ்தெ காய் ரகு4நாதா2
ஆஸெ தொர் ஹோருஸ் மொகொ3 ரகு4நாதா2- தூ
அவ்னா ரி:யெஸ்தெ காய் ரகு4நாதா2
ஸாப் ஹோர் ஸயன ஸ்ரீ ரகு4நாதா2-தொக3
ஸனொ மெனி லக3ரேஸ்பா3 ரகு4நாதா2
நடன கோ3பால ஸ்ரீ ரகு4நாதா2 -- தொர
நாயகி ஜன்னோ ஹரி ரகு4நாதா2
ஹே ராகவா ! உன்னையே எண்ணி உருகி அழைக்கிறேன். நீ பாரா முகமாயிருப்பது பொருந்துமா ?
என் ஆசைக்குரிய நீ வராமலிருப்பது முறையா ? பாம்பின் மேல் பள்ளி கொண்ட பெருமாளே !
உன்னைக் காணத்துடிக்கும் என் வாட்டத்தைப் போக்க மாட்டாயா ? ஹே நடன கோபாலா, நான்
தான் உன் நாயகி என்பதை உணர மாட்டாயா ? என்றெல்லாம் நாயகி சுவாமிகன் கூறிக் கதறுகிறார்.
தா3மோத3ர ஸ்ரீஹரி ராக4வ தொர த4ய கோன் கலமவயி மீ தொக3 நொம்மிலி ரி:யெனிஹாரே மொர
மேகு4வர்ணு தே3வு--கா தொர த3ய அவ்னா ரி:யெத் மீ யெக3 காய் கரு ஸ்ரீ தே3வு
ஹே தாமோதரா ! உன் திவ்ய கடாக்ஷம் எப்போது கிட்டும் ? நீலமேக சியாமள வர்ணா !
உன்னையே நம்பிய எனக்குக் கருணை காட்ட உன் மனம் இளகவில்லையா ? நெஞ்சுருக உன்னையே
நினைக்கும் என்னை வஞ்சகம் செய்யலாமா ? தஞ்சமடைந்தவரை அஞ்சாதே என்று அபயமளிக்கும்
அருட்கடலே ! 'சிறியேன் படுந்துயரை அறியாயோ செங்கண்மால் ஹரியே உன் திருவடியே
அடியேற்குத் துணை ' -என்று பாடுகிறார்.
பாராய் ஸ்ரீ கோபாலா முக வாட்டம் பார்த்து ஆனந்தம் தாராய் - அன்பாய்
சேராய் எங்கள் துன்பம் தீராய் உனைத்தவிர வேறார் எமக்கிங்கே
ஹே கோபாலா ! உன்னைக் காணாது வாடும் எங்கள் துயரைத் துடைத்து மகிழ்ச்சியையருள
உன்னைத் தவிரயாரால் இயலும் ? நீ தானே என் துணைவன் என்றெல்லாம் மனமுருகப் பாடுகிறார்.
எவ்வளவு முறை அழைத்தும் யதுகுல நந்தனன் வராததால் நாயகி சுவாமிகள் தோழியரைத்
தூதனுப்ப முற்படுகிறார். சங்க இலக்கியங்களில் அன்னம், கிளி, புறா, குயில், நாரை, வண்டு
முதலியவற்றைத் தூதனுப்புதல் காணப்படுகிறது. மாறாக காளிதாஸரின் மேக சந்தேச காவியத்தில்
மேகத்தையே தூதனுப்பும் அற்புதமான வர்ணனை காணக்கிடைக்கிறது. நம் நாயகி சுவாமிகள்
தூதனுப்புவதற்கு தம் தோழியிடம் குன்று குடையாய் எடுத்த கோவிந்தனின் அடையாளங்களைக்
கூறுகிறார்.
உச்சியிற் கோணக் கொண்டை ஒய்யாரமதாயிருக்கும்
இச்சித்தவர்க்கெல்லாம் எஜமானாயின்பம் பெருக்கும்
கைதனில் கன்று மேய்த்திடும் கோலிருக்கும் பாராய்
இவ்வாறு ஆயர்பாடிக் கண்ணனின் அடையாளங்களைக் கூறிய பின் தம் தோழியரிடம் தம்
விரகவேதனையை விளக்குகிறார்
மழையிலாப் பயிரது போல் வாடுகிறேன்
ஆற்றங்கறை தீபமென அலையுதே என் நெஞ்சம்
ஆலைக்கரும்பது போல் நான் ஆனேன் அல்லல் தீராய்
பறி கொடுத்தவர் போல் பரிதவிக்குதே என் நெஞ்சம்
வெயிலிலகப்பட்ட புழுபோல் மெலிந்தேனே
என்னைப் போல பாவிகள் ஈரேழ் புவனத்துண்டோ
நற்பூசை செய்திருந்தால் கண்ணன் என்னைப் பிரிந்திருப்பானா ?
கண்ணீர் ஆறாகப் பெருக அவன் காணாது சென்றானே !
விண்மாரி தடுத்தவன் கண்மாரி தடுக்க மாட்டானா ?
என்னைப் பரிதவிக்க விட்டதால் அவனுக்கென்ன பயன் ?
நம்மை மயக்கிய மாதவன் எங்கே ?
கணநேரமும் எம்மைவிட்டுப் பிரிய மனமில்லாதவன்
எவ்வாறு பிரிந்து சென்றான் ?
உங்களை விட்டு எங்கும் போகிலேன் நானென்று
எங்களிடத்தில் அன்பாய் இயம்பிய கோபாலன்
தான் செய்த ஸத்தியத்தை மறந்து விட்டானா ?
எண்ணிக் கண் திறக்கும் முன் எதிர் வந்து நிற்பானே தோழி
எண்ணிய எண்ணத்தின்படி எம்மோடிருப்பானே
எம்மைவிட்டால் சுகமில்லை என்றானே,சொன்ன உரை
பொய்யோ அவனை அழைத்து வந்தாலொழிய யாக்கையினி நில்லா.
நாயகி சுவாமிகளின் இவ்வார்த்தைகள் ஓர் அழகிய குறட்பாவை
நினைவுறுத்துகின்றன.
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க்கு உரை
என்று திருவள்ளுவர் தலைவியின் உரையை விளம்புகிறார். ஒரு தலைவன் தன் தலைவியிடம் ஊருக்குச்
சென்று விரைவில் வருகிறேன் என்று கூறியதும், 'நீங்கள் என்னைப் பிரிந்து சென்றால் உயிர்
வாழ மாட்டேன், விரைவில் வருகிறேன் என்றுசொல்கிறீர்களே,உங்களைப் பிரிந்து நான்
உயிருடன் இருக்கமாட்டேன் என்று தலைவி உறுதியுடன் உரைக்கிறாள்.
யாமி இதி வசனம் சுருத்வா நாயகி க்ஷுயதே
ந யாமி இதி வசனம் சுருத்வா நாயகி வர்த4தே
தலைவன் போகிறன் என்று கூறியதைக் கேட்டதும் தலைவி மெலிந்து விடுகிறாள். தலைவன்,
தலைவியின் நிலை கண்டு இரங்கி ' ந யாமி ' உன்னைப் பிரிந்து எங்கும் போகமாட்டேன் என்றோ,
'நயாமி ' உன்னையும் அழைத்துச் செல்கிறேன் என்று கூறியதும் தலைவி பெருத்து விடுகிறாள்
ܬஎன்றெல்லாம் காவியங்களில் வர்ணிக்கப்பட்டுள்ளது.
நம் நாயகி சுவாமிகள் பரமபுருஷனைப் பிரிந்த துயரில் புலம்புகிறார். கண்ணனின் பிரிவு
ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு யுகமாகத் தோன்றுகிறது. பிரிவதற்காக பிழை ஏதும் செய்தேனோ ?
அப்படியே செய்திருந்தாலும்கார்முகில் வண்ணன் கருணைக் கடல் அல்லவா ! என்னை மன்னிக்க
மாட்டானா ? கரம் பிடித்து ஒருபோதும் மறக்கேன் என்றுரைத்தானே ! உடலுயிரையுங்கரைத்தானே
--இவ்வாறு கூறி மயங்கிவிழுகிறார். தோழியர் அவரை ஆஸ்வாஸப்படுத்தி சிறிது நீர்
அருந்துமாறும்,உணவு உட்கொள்ளுமாறும்சொல்கின்றனர்.
அன்னம் புசியென்றுரையாதே அகன்று போடி
அன்னம் விஷமாயிருக்கிறது அறிந்து கொள்நாடி
தாக நீரேனுங் கொள்ளெனச் சாற்றுகிறாய் இங்கே
தாக மடங்குமோ தாமோதரனைக் காணாதிங்கே
என்று சுவாமிகள் கூறி உணவு உட்கொள்ள மறுக்கிறார்.
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணனேஎன்று நம்மாழ்வார்
அனுபவித்தது போன்றே நாயகி சுவாமிகளும் அனுபவித்தார்.
பாலுங் கசந்ததடி, படுக்கையும் நொந்ததடி என பாரதியாரும் பாடினார்
அல்லவா ! கண்ணுக்குக்
கண்ணாய் இருந்த கண்ணன் எங்கே போனானோ? முரளி கானம் செய்தே நம்மை மோகித்தவன்.
மிஞ்சுதடி மோகமிங்கே மேக வண்ணன் மேலே பெருகுதடி ஆசை வெள்ளம் பெருமாளைச் சேரவே
இந்து, இங்கே கதிரவன் போல் எரிக்கிறான். நீலமேக சியாமள சுந்தரனை நினைக்கும் போது
ஸர்வாங்கமும் எரியுதே, என் செய்வேன்', என்று சுவாமிகள் பிரிவுத் துயரைப் புலப்படுத்து கிறார்'
இதைக் கேட்ட தோழியர், 'குளிர்ந்த நீரில் குளித்தால் கொதிப்படங்கும்,' என்று உபாயம் கூற அதை
சுவாமிகள் மறுக்கிறார்.
தீர்த்தம் ஆடவா என்று என்னைச் செப்பாதே நாயகனைப் பிரிந்த நங்கைமார் இருக்கலாமோ ?
ஆனால் நான் உயிருடன் இருக்கிறேன். எதற்காக ? உடலை விட்டுவிட்டால் பின் அந்த பரமாநந்த
சொரூபனைப் பார்க்க முடியாதே என்பதற்காக, என்னுயிர் உலர்ந்து ஏகாமுன் ஓடிப்போய்
அச்சுதனை அழைத்து வாடி என்கிறார் சுவாமிகள். 'எப்படியேனும் ஆயர்தம் கொழுந்தை அழைத்து
வருகிறோம், நீ உடனே அலங்காரம் செய்துகொள்' என்றனர்' தோழியர்.
கொண்டை முடித்துக் கொள்ளென நீ கூறலாமோடி
அண்டையிலிருந்து விளையாடும் அரிதானெங்கே
அலங்காரம் பண்ணிக்கொள் என்றால் ஆற்றாதே நீ ஓடு
பசியுடனே எவ்விடம் கோபாலன் இருப்பானோ
கட்டித் தயிரும், கதலி கனியும், சட்டி நிறைய கற்
கண்டும், கறந்த பாலும், வெண்ணெயும் கையோடு
கொண்டு போய்க் கொடு
என்கிறார் அன்புடன், உள இயல் நிபுணரான சுவாமிகள் மேலும் மொழிகிறார்.
பசியுடனிருக்கும் போது என்னைப்பற்றிக் கூறாமல்,
உண்டபின் உள்ளபடி உரைப்பாய், கண்ணன் எப்போது
வருவானடி கலந்து சுகம் பெறவே வந்து நொந்து கிடக்கின்ற
என் சிந்தை நோயறுப்பானோ பாலும் நீரும் போலப்
பரந்தாமனோடிருக்கும் நாள் எந்நாளோ' உனக்கு வந்தனம்
செய்கிறேன் மனம் வைத்து முரளீதரனை நீ போய் அழைத்து
வாடி அவன் சீலத் திருவடிகளை என் சென்னி மேல் தரிக்க
வேண்டும், அவனது திருவடியே தஞ்சமலால் திக்குண்டோ ?
பாத மலரல்லால் துணை பாவாய் நமக்குண்டோ
நாதன் அவனே நமக்கு நாயகன் வேறுண்டோ
என் ஸர்வாங்கமும் எரியுதே, அவன் வரவில்லையெனில்
அவனது திருவடிப் பொடியைக் கொணர்ந்து தேகமெல்லாம் பூசு,
என்கிறார் கூடல் நகர்க் கோதையாகிய நம் சுவாமிகள். இவ்வாறு சந்தமினிக்கும், சிந்தையினிக்கும்
சௌந்தர்ய ஸெளராஷ்ட்ர மொழியிலும், கன்னலுமினிய தீந் தமிழிலும் நாயகி சுவாமிகள்
அருளிய இந்த கீர்த்தனைகளில் பிரிவுத் துயரால் வாடும் நாயகியின் நிலை--எதிலும்
விருப்பமின்மை, வாடிய தோற்றம், உற்சாகமின்மை, துயரம்,தவிப்பு, உன்மத்த நிலை போன்ற
அனைத்து உணர்வுகளும் காணப்படுகின்றன. அகத்துரை பாடல் போன்று அமைந்திருந்தாலும்
இக்கீர்த்தனைகள் பக்தியைப் பெருக்கி, தூய்மையான உணர்வுகளைத் தூண்டி இறைவனுடன்
இணைக்கக் கூடியன.
தன்னை மறந்தாள் தன் நாமங்கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே
என்ற திருநாவுக்கரசரின் பாடலுக்கிணங்க நாயகி சுவாமிகள் பிரிவுத் துயரால் உணவின்றி,
உறக்கமின்றி, தம்மையே மறந்து தாமோதரனையே நினைந்து உருகுகின்றார். காணுமிடங்களில்
எல்லாம் அவருக்கு கமலக்கண்ணனே காட்சியளித்தான்.
காக்கைச் சிறகினிலே நந்தலாலா நின்றன் கரியநிறம் தோன்றுதய்யா நந்தலாலா
பார்க்கும் மரங்களில் எல்லாம் நந்தலாலா நின்றன் பச்சை நிறம் தோன்றுதய்யா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா
கேட்கும் ஒலியில் எல்லாம் நந்தலாலா நின்றன் கீதம் இசைக்குதடா நந்தலாலா
என்று பாரதியார் அனுபவித்தது போல் நம் நாயகி சுவாமிகளுக்கு பார்க்குமிடமெல்லாம்
பரந்தாமனே தோன்றுகிறார்.
இவ்வாறு நாயகி பா4வ பக்தியில் முழுவதும் தம்மை அர்பணித்துக்
கொண்ட நம் நாயகி சுவாமிகள்
மொர நாவ் நடன கோ3பால நாயகி மொக ஜெலும் ஜுண்ணா
என் பெயர் நடன கோபால நாயகி, எனக்கினி பிறப்பில்லை என்ற
உறுதியுடனிருந்தார்
மன்மனா ப4வ மத்3ப4க்தோ மத3யாஜி மாம் நமஸ்குரு
மாமே வைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜானே ப்ரியோஸி மே
என்னிடத்திலேயே மனதை வைத்து,என் பக்தனாய்,என்னையே வணங்கி பூஜிப்பவன் என்னையே
வந்தடைவான், என்று சாரங்கபாணியே ஸத்தியம் செய்துள்ளார். அவ்வாறே அல்லும் பகலும்
தம்மையே எண்ணி,எண்ணி உருகிய நாயகி சுவாமிகளை ஸ்ரீமந் நாராயணன் ஏற்றுக் கொண்டு
பேரின்பத்தை அருளினார்.
|