பகவத் கீதை என்பதற்கு பகவான் பத்மநாபன் திருவாயால் பகரப்பட்டது என்று பொருள். ' பாரத: பஞ்சமோ வேத: '   என்றபடி மஹாபாரதம் ஐந்தாம் வேதமாக திகழ்கின்றது. அதில் ஞான காண்டம், கர்ம காண்டம் என இரு பிரிவாக உள்ளது. இதில் ஞான காண்டம் என்பது ஜீவாத்மா, பரமாத்மா ஜகத் இவைகளைப் பற்றி கூறுவதாகும். ஞான காண்டமாக திகழ்வது பகவத் கீதையாகும். இதில் தத்துவ விளக்கம் அல்லது மெய்ப் பொருள் விளக்கம் முறையாக அமைந்துள்ளது. பகவத் கீதை மஹாபாரதத்தில் பீஷ்ம பர்வத்தில் 25-வது அத்தியாயத்திலிருந்து 42 வது அத்தியாயம் வரையில் அமைந்திருக்கிறது.

மஹாபாரதத்தில் அடங்கியுள்ள விஷயங்களை பால் என்று வைத்துக் கொண்டால் பகவத் கீதையில் அடங்கியுள்ள விஷயங்களை வெண்ணெய் என்று பாராட்டலாம். உபநிஷதங்களின் சாரமாக விளங்குவது பகவத் கீதை. ஆகவே தியான சுலோகத்தில்

ஸர்வோப3நிஷதோ3 கா3வோ
தோக்3தா4 கோ3பால நந்த3ன:
பார்த்தோ24ர் போ4க்தா
துக்34ம் கீ3தாம்ருதம் மஹத்

உபநிஷதங்கள் அனைத்தும் பசுக்கள். அந்த பசுக்களிடமிருந்து பால் கறப்பவன் ஸ்ரீ கிருஷ்ணன். பாலாகிய அமுதத்தைப் பருகுபவர்கள் பேரறிஞர்கள். பால் சுரப்பதற்கு காரணமாக இருந்தவன் அர்ச்சுனனே கன்று. கீதை என்னும் அமிர்தம் பால் ஆகிறது.' இவ்வாறு விளங்குகின்ற கீதையின் தத்துவங்களை,மதுரையின் ஜோதி,சௌராஷ்ட்ர குல தீபம் என்றெல்லாம் போற்றப்படும் ஸ்ரீமந் நாயகி சுவாமிகள் தம் சௌந்தர்ய சௌராஷ்ட்ர மொழி பாடல்களிலும், தீந்தமிழ்ப் பாடல்களிலும் எடுத்தாண்டுள்ளார். கீதையின் சாரத்தையெல்லாம்,மக்களுக்கு எவ்வாறு சொல்லியிருக்கிறார் என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.

ஸ்ரீ கிருஷ்ண பகவானின் தூதுவினால் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் எந்த விதத்திலும் சமாதானம் ஏற்படவில்லை. பாண்டவர்களுக்குரிய நாட்டில் ஊசி முனை அளவு கூட திருப்பித்தர துரியோதனன் மறுத்து விட்டான். ஆகவே போர் புரிவதைத் தவிர வேறு வழியில்லாமல் போயிற்று. ஆகையால் போர் புரிய இரு பக்கத்தாரும் அணிவகுத்து நின்றனர். அப்போது பார்த்தன் போரில் தனக்குச் சாரதியான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் 'இப்போரில் நான் யாரோடு யுத்தம் செய்ய வேண்டும் என்பதையும், போரில் முன்னிற்பாரையும் பார்க்க வேண்டும். ஆகவே படைகளிரண்டிற்கும் நடுவே தேரை நிறுத்துக ' என்றான் அவ்வாறே ஸ்ரீ கிருஷ்ணரும் இரண்டு சேனைகளுக்கிடையில் நிறுத்தினார்.

தன்னெதிரே தாத்தா பீஷ்மரையும், ஆச்சாரியர்களான துரோணரையும், கிருபாச்சாரியாரையும், மாதுலர், அண்ணன் தம்பிகளையும், மக்களையும் பேரர்களையும், தோழர்களையும்,அன்பர்களையும் கண்டான். இவர்களை எல்லாம் பார்த்து நிலை தடுமாறி பேரிரக்கம் கொண்டான். சுற்றத்தாராகிய திருதராஷ்ட்ர புத்திரர்களைக் கொல்லுவதால் நாம் இன்புற்றிருப்பது எப்படி? ஆசையால் அறிவிழந்த இவர்கள் எது தர்மம் என்றறியாமல் இருக்கின்றனர். குலநாசத்தால் ஏற்படும் கேட்டை நன்கு உணர்ந்த நாம் யுத்தத்தில் ஈடுபடலாமா ? அவர்கள் என்னைக் கொன்றாலும் பரவாயில்லை. நாம் இவர்களை ஜெயிப்பது அல்லது அவர்கள் நம்மை ஜெயிப்பது, இதில் எது மேலானதென்று விளங்கவில்லை. மேன்மை பொருந்திய பெரியோரைக் கொல்லாமல் பிச்சை ஏற்று உண்பதே சாலச் சிறந்தது. தனக்கு ஒரே குழப்பமாக உள்ளது

கார்பண்ய தோ3ஷோ பஹதஸ்வ பா4வ:
ப்ருச்சா3மி த்வாம் த4ர்மஸம் மூடசேதா:
யச் ச்ரேய: ஸ்யாந்நிஸ்சிதம் ப்ரூஹி தன்மே
சிஷ்யஸ் தே அஹம் சாதி4மாம் த்வாம் ப்ரபன்னம்

சிறுமை என்ற கேட்டினால் நல்லியல்பை இழந்த நான்அறநெறி இன்னது என்று அறியாது மயங்கி உம்மை வினவுகின்றேன். எனக்கு சிறப்புத் தருவதை உறுதியாகக் கூறும். நான்உன் சிஷ்யன். தஞ்சமடைகின்றேன். உபதேசித்து அருள வேண்டும்'என்று பகவானிடம் வேண்டுகிறான்.

எங்த ஒரு துறையிலும் முன்னேற்றமடைய,வழிகாட்ட குரு ஒருவர் தேவை. ஆன்மிகத்துறையில் குரு ஒருவர் நிச்சயம் தேவை. சூரிய ஒளி எங்கும் நீக்க மற நிறைந்திருக்கிறது. வேறுபாடின்றி எல்லாப் பொருள்களிலும் சமமாக படுகின்றது. ஒரு குவி லென்ஸ் மூலமாக சூரிய ஒளி சென்றால் அதன் ஒளியும் வெப்பமும் மறுபுறம் ஒரு புள்ளியில் குவியும். அந்த இடத்தில் ஒரு பஞ்சையோ காகிதத்தையோ வைத்தால் தீப்பிடித்து எரிவதைக் காணலாம். அது போல சூரிய ஒளி போல கடவுளின் கருணை எங்கும் நிறைந்திருக்கிறது. கடவுளின் கருணை அதிகம் பெற உதவியாக இருப்பவர் குவிலென்ஸ் போன்ற குருவாவார். எனவே தான் ஸ்ரீமந் நாயகி சுவாமிகள் குருவின் பெருமைகளைத் தம் பாடலில் தெரிவிக்கின்றார்.

கு3ரு த்4யாந் காரி மொந்நு தூ ஸத்
கு3ரு த்4யாந் காரி மொந்நு
கு3ரு த்4யாந் காரி ஸ்ரீ ஹரி தெனொஸ் மெனி ஹட்வி
திரு மந்துர் த்3வய சரமஸ்லோகுன் அப்பை

குருவை தியானம் செய் குருவையே ஹரி என்று நினை. அவர் திருமந்திரம்,த்3வயம்
சரம ஸ்லோகம் அருளுவார் என்கிறார் , மேலும்

கு3ரு சரணுக் புஜெ கரெத் ஜுடயி ஸ்ரீ
ஹரி தெநோஸ் மெனி ஹட்வி த்யாந் ஹொடயி

குருவின் திருப்பாதங்களுக்கு பூஜை செய். ஹரியே அவர் என்று நினை. தியானம் கைகூடும் என்கிறார்.

ஹரி குரு ஹொய் அர்ஜுநுக் தீ அக்ஞானு
கடெ தெ3ப்ப மிடாய், குரு பக்தி கரெத் முக்தி பொந்துவாய் .

ஹரியே குருவாக இருந்து அர்ச்சுனனுடைய அக்ஞானத்தை போக்கியருளினார். ஆகவே குரு பக்தி செய்தால் முக்தியை அடையலாம் என்று போதிக்கிறார். குருவும் தெய்வமும் எதிர் நின்றால், இருவரில் யாரை முதலில் வணங்குவது ? குருவை வணங்கிடுவேன். ஏனென்றால் கோதில் இறைவனைக் காட்டியது குருவல்லவா ? என்கிறார் கபீர்தாஸ். எனவே நாயகி சுவாமிகள் தம் பாடல் களில் தம் குருவாகிய வடபத்ராரியரின் நாமத்தை முத்திரையாக அமைத்து தன் குரு பக்தியை வெளிபடுத்தியுள்ளார்.

அர்ச்சுனனுக்கு அச்சுதன் கீதையை உபதேசிக்கும் போது போர் புரிதல் என்கின்ற வினையாற்ற கடமைபட்டுள்ளாய். வினைப் பயனில் ஒருபோதும் உனக்கு உரிமை இல்லை. கர்ம பலன்களை உண்டுபண்ணுபவன் ஆகாதே. கர்மம் செய்யாமல் வெறுமனே இருப்பதில் விருப்புக் கொள்ளாதே என்று பகவான் கீழே குறிப்பிட்டுள்ள சுலோகத்தில் கூறுகிறார்

கர்மண்யேவாதி4காரஸ்தே மா ப3லேஷு கதா3சன
மா கர்ம ப3ல ஹேதுர் பூ4ர்மா தே ஸங்கோ3ஸ்த்வ கர்மணி

இப்படி கூறியவர் மற்றொரு சுலோகத்தில்

ஸர்வத4ர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா ஸர்வபாபேப்4யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச:

அதாவது எல்லா தர்மங்களையும் பரித்தியாகம் செய்து விட்டு என் ஒருவனையே சரணடைக. எல்லா பாபங்களிலிருந்து உன்னை விடுவிப்பேன் வருந்தாதே என்று சரணாகதி தத்துவத்தை உணர்த்துகிறார். பார்த்தனுக்கு என்னென்ன கூறி அவனைத் திருத்தினாயோ அதையே எனக்கும் கூறுவாயாக என்று நாயகி சுவாமிகள் ஒரு பாடலில்

ரெத்து மர்ஜுனுகு ர:த்தொ வாடேஸ் மெந் மொந்
நித்தொ கரெனி ஹாரே த்யேஸ்
அத்தோ மீ மைலொ ரேஸ்ரே ஹரி ஹரி

ஸெரிர் தி4ல்ல ஸொடெ அர்ஜுனுகு சரமஸ்லோக்
ஹரி தூ ஸங்கே3னி ஹாரே த்யேஸ்
தெ4ரி மீ மைலொரேஸ்ரே ஹரி ஹரி.

ரதத்தில் அர்ச்சுனனுக்கு உண்மையான நெறியைக் கூறி அவன் மனதைத் திருத்தினாய் அல்லவா ? அதையே நான் உன்னிடம் வேண்டுகிறேன்.போர் களத்தில் உறவினர்களைக் கண்டு உடல் சோர்வடைந்த அர்ச்சுனனுக்கு சரணாகதியை போதித்தாய் அல்லவா ? அதையே நான் உன்னிடம் வேண்டிக் கொள்கிறேன் என்கிறார்.

அடுத்து பகவான்

மனுஷ்யானாம் ஸஹஸ்ரேஷு கஸ்சித்3யததி ஸித்34யே
யததாமபி ஸித்3தா4னாம் கஸ்சின் மாம் வேத்தி தத்வத:

ஆயிரக் கணக்கான மனிதர்களுள் யாரோ ஒருவன் மன பரிபாகத்தின் பொருட்டு முயலுகிறான் முயலுகின்ற பெருவாய்ப்புள்ளோர்களுள் யாரோ ஒருவன் தான் என்னை உள்ளபடி அறிகிறான். ஞானம் பெறுதல் மிக மிக அரிது.. மரம் ஒன்றில் ஆயிரக் கணக்கான விதைகள் உண்டாகின்றன. அவைகளில் பெரும் பகுதி வேறு உயிர்களுக்கு உணவுப் பொருளாகிவிடு கின்றன. தரிசு நிலத்திலோ, பாறையிலோ விழுந்த விதைகள் சரியாக முளைத்து வளருவதில்லை. நல்ல மரமாவது ஒரு சிலவே. அது போல பெறுதற்கரிய மானுடப் பிறவி ஈஸ்வர லாபத்திற்கே என்று அமைந்ததாயினும் அது தான் வாழ்கையின் குறிக்கோள் என்று அறிபவர்கள் மிகச் சிலரே. இறைவனை அடைதல் வாழ்வின் சிறந்த குறிக்கோள் என்றறிந்த நல்லோர்களுள் ஒருவரே நாயகி சுவாமிகள். மேலும் ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஞானியைச் சிறப்பித்து

பஸூனாம் ஜன்மனாமந்தே ஞானவான் மாம் ப்ரபத்3யதே
வாஸுதே3வ: ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுது3ர்லப4

பல பிறவிகளின் இறுதியில் ஞானியானவன் யாவும் வாசதேவ சொரூபம் என்று என்னை வணங்கி வந்தடைகிறான். அத்தகைய மகாத்மா கிடைத்தற்கு அரியவன். பகவானிடத்து அனன்ய பக்தி பண்ணும் ஞானியாகத் திகழ்ந்து அனைத்துமே வாசுதேவ சொரூபம் என்று திடமாக உணர்ந்தவர் ஸ்ரீமந் நாயகி சுவாமிகள். தென்படும் அனைத்தும் பரமாத்மா சொரூபமாக உணர்ந்து பக்தி செய்த மஹான்கள் தோன்றிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களுள் ஒருவரே ஸ்ரீ நாயகி சுவாமிகள். அவர் ஒரு பாடலில்

கொங்கபாயிம் கெ3ங்க3 கொங்க தொயிர் ஸேஸ்தே
கோன்ரே பரப்3ரஹமு

கங்கையானவள் யாருடைய பாதத்தில் இருக்கிறாள் ? யாருடைய தலையில் இருக்கிறாள் ? கங்கையை தன் பாதத்தில் வைத்திருப்பவன் பரபிரம்மமா ? தலையில் தாங்கிக் கொண்டிருப்பவன் பரபிரம்மமா ? என்று வினா தொடுத் தவர் மற்றொரு பாடலில் அதற்கு விடையாக

ஸாப் ஹோர் நிஞ்ஜிரெஸ்
தெனோஸ் ஸாக்ஷாத் பரப்3ரஹ்மம்

பாம்பணையில் பள்ளி கொண்டுள்ள பரந்தாமனே சாட்சாத் பரபிரம்மம் என்கிறார். அனைத்துமே வாசுதேவ சொரூபம் என்று வழிப்பட்டவரின் கொள்கை இதுவாகத் தான் இருக்க வேண்டும்

ஏகம் சாஸ்த்திரம் தேவகி புத்ர கீ3தம்
ஏகோ தே3வோ தேவகி புத்த்ர ஏவ
ஏகோ மந்த்ரஸ் தஸ்ய நாமானி யானி
கர்மாப்யேகம் தஸ்ய தே3வஸ்ய சேவா

தேவகியின் புத்திரனான ஸ்ரீ கிருஷ்ணனின் பகவத் கீதை ஒன்றே சாஸ்திரம் ஸ்ரீ கிருஷ்ணன் ஒருவரே தெய்வம்,அவன் நாமங்களே மந்திரங்கள். அவனுக்கு கைங்கர்யம் செய்வது ஒன்றே சேவை. இந்த கொள்கைபடி நாயகி சுவாமிகள் வாழ்ந்தார் என்பது அவர் பாடல்களின் மூலம் அறிகிறோம்.

அடுத்து ஸ்ரீ கிருஷ்ண பகவான்

இஷ்டான் போ4கா3ன் ஹிவோ தேவா தா3ஸ்யந்தே யக்ஞ பா4விதா;
தைர் த3த்தானப்ரதா3யைப்யோ யோ பு4ங்க்தே ஸ்தேன ஏவஸ:
யக்ஞசிஷ்டாசின: ஸந்தோ முச்யந்தே ஸர்வகில்பி3ஷை;
புஞ்ஜதே தே த்வக4ம் பாபா யே பசந்த்யாத்மகாரணாத்

யாகத்தால் பேணப் பெற்ற தேவர்கள் உங்களுக்கு இஷ்டமான போகங்களைத் தருவார்கள். அவ்வாறு அவர்களால் கொடுக்கப் பெற்றதை அனுபவித்ததற்கு ஈடாக அவர்களுக்கு கைம்மாறு அளிக்காது நுகர்பவன் திருடனாவான் ' 'யாகத்தில் மிஞ்சியதை உண்ணும் நல்லோர் எல்லாப் பாபங்களிலிருந்து விடுபடுகின்றனர். ஆனால் தங்கள் பொருட்டே சமைக்கும் பாபிகள் பாபத்தை உண்கிறார்கள்.

எத்தொழிலைச் செய்தாலும் அதன் மூலம் உலக நன்மையும், இறைவனது பெருமையும் முன்னிற்க வேண்டும். நித்திய கர்மத்தில் தக்கதொரு சான்று எடுத்துக் கொள்ளுமிடத்து சமைத்த உணவை முதலில் இறைவனுக்கும், மற்றவர்க்கும் அர்ப்பணம் செய்து மிஞ்சியதை உண்பவன் மேலோன். மற்றவர்களைப் பற்றி எண்ணமில்லாது தனக்கென்றே உணவை சமைப்பவன் பாபத்தையே புசிப்பவன் ஆகிறான், ஆகையால் ஸ்ரீ நாயகி சுவாமிகள் ஒரு நாமாவளியில் சிறப்பாக

ஹந்தெ3 ஹந்தெ3 தா4நுகஸ்கி ஹரிக்
ஹாத் தெ3க்கட3ஸ் தெநொ
பொந்த3ய் பொந்த3ய் புஜா போ3ளுந் --த்யே
அந்தி3லெத் ஜாய் அஸ்கி மூளுந்
கோ3விந்தா3 மெநொ அஸ்கி வேளும்
கோ3பாலா மெநொ அஸ்கி வேளும்
நிச்சு நிச்சு ஹுன்னொ ஹுன்னொ
ஹந்தெ3 ஹந்தெ3 தா4நுகஸ்கி ஹரிக்

சமைப்பதை யெல்லாம் ஹரிக்கு நைவேத்யம் செய்பவன்,அவன் செய்த பூஜை பலன்களைப் பெறுகிறான்.இதை உணர்ந்து கொண்டால் எல்லா வினைகளும் வேரறும். ஆகவே எப்போதும் கோவிந்தா, கோபாலா என்று சொல்லுங்கள். தினம் தினம் சமைத்த உணவை யெல்லாம் ஹரிக்கு அர்ப்பணம் செய்யுங்கள் என்று மக்களுக்கு பகவான் சொன்ன மேற்கண்ட சுலோகங்களின் பொருளை மிக எளிய முறையில் செய்ய வேண்டிய செயலை உணர்த்துகின்றார் நாயகி சுவாமிகள். மேலும்

புஜெ கர்னாஸ்தக் கோ32னி நொக்கொ

̬பூஜை செய்யாமல் வெறுமனே உண்ண வேண்டாம் என்றும்

ஹந்தொ3 கஸ்தந்து3 கோ3விந்தா3க் ஆனந்த3ம் ஹோய்
நந்த3 கோ3பாலுக் பொந்தை3 கா3யி தூ3த்

கோவிந்தனுக்கு ஆனந்தம் அளிக்கின்ற பச்சரிசியை சமைப்பீர், நந்த கோபாலனுக்கு பிடித்தது பசும் பால் அவனுக்கு படைப்பீர் என்கிறார்.

மேலும் ஸ்ரீ பகவான் ஜநார்தனன், தனஞ்ஜயனுக்கு கூறுகையில்

பத்ரம் புஷ்பம் ப2லம் தோயம் யோ மே ப4க்த்யா ப்ரயச்ச2தி
ததஹம் ப4க்த்யுபஹ்ருத மச்னாமி ப்ரயதாத்மன:

யார் எனக்கு இலை,மலர், கனி அல்லது நீரை பக்தியோடு படைக்கிறானோ அந்த தூய மனமுடையவனின் அன்பளிப்பை நான் மகிழ்வோடு அருந்துகிறேன்

எப் பொருளாலும் பகவானை அடையமுடியாது. நல்ல மனமுடையவரது பக்தி வலையில் மட்டுமே அவன் அகப்படுகிறான். பக்திக்கு அறிகுறியாக இயற்கையில் எளிதில் அகப்படுகின்ற கனி, மலர், இலை, நீர் ஆகிய எதைப் படைத்தாலும் அவன் மகிழ்வோடு வாங்கிக் கொள்கிறான். விதுரர் அன்புடன் வார்த்த கஞ்சியை அமிழ்தமெனப் பாராட்டி அருந்தினார். குசேலர் கொண்டு வந்த அவலை அவர் வலியப் பிடுங்கி வாயில் போட்டுக் கொண்டார். சபரி கொடுத்த உலர்ந்த காய் கனிகளை இராமர் அன்புடன் புசித்தார். வேடன் கண்ணப்பரின் உமிழ் நீரும், அவன் மென்ற மாமிசமும் சிவனார்க்கு ஒப்பற்ற நைவேத்யமாயின. அடியார்களின் பக்தியானது பகவானுக்கு அவ்வளவு பெரியது.

ஆகவே நம் நாயகி சுவாமிகள்

கு3ண்டு3லவைநா யெமோ தெக கு3ண்டே3 தெ3க்டா3
கு3ண்டே3 கோன் காய் கரன் ஹோயேட்
கு3ண்ட3வ்நா முல்லாம் யே பி3ர்மா:ண்டஸ்கோ மொவெ
புண்ட3ரி காக்ஷ§டுக் பூ3ல் புஜெ கார் மொந்நு

எமன் மக்களின் உயிர் கொண்டு செல்ல குண்டடி போடுவான். அவனது மனது கல் மனது. யார் என்ன செய்ய முடியும். அவ்வாறு அவன் வந்து உயிர் கொண்டு செல்லா முன்னம் புண்டரிகாக்ஷனுக்குக் மலர் முதலியவை கொண்டு பூஜை புனஸ்காரங்களை செய்யுங்கள். பகவானை அடைதல் ஒன்றையே குறிக் கோளாகக் கொண்டு பக்தியும், பூஜையும்,சேவையும் சர்வ காலமும் செய்து வர வேண்டும் என்று மக்களுக்கு உபதேசம் செய்து நல்வழி படுத்து கின்றார். மேலும் ஒரு தமிழ் பாடலில் சுவாமிகள் நவநீதம் பால் கனி சீனி நற் கருப்பஞ்சாறு தந்து புவன முண்ட வாயனைப்  போற்றிட வேண்டும் என்கிறார்.

அடுத்து பகவான்

மன்மனா ப4வ மத்34க்தோ மத்3யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி யுக்த்வைவ மாத்மானம் மத் பராயண:

மனதை என்னிடத்து வைத்து, என்பால் பக்தி பண்ணி எனக்கு யாகம் செய்து, என்னை வணங்கு. என்னைக் குறியாகக் கொண்டு உள்ளத்தை உறுதிப் படுத்தி என்னையே அடைவாய் என்கிறார் இதே கருத்தையே மற்றோர் இடத்தில் பகவான்

மன்மனா ப4வ மத்34க்தோ மத்3யாஜீ மாம் நமஸ்குரு
மாமே வைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜானே ப்ரியோஸிமே

என்பால் மனம் வைத்து, என்னிடம் பக்தி பூண்டு என்னை ஆராதித்திடுவாய். என்னையே வணங்கு. என்னையே அடைவாய், எனக்கினியானே! உனக்கு சத்தியம் செய்து கூறுகிறேன் என்று கூறுகின்றார் சத்தியப் பொருளாக விளங்குகின்ற பகவானே சத்தியம் செய்து கூறுகின்றார். இது எப்படி இருக்கிறது என்றால் பத்திரம் எழுதி அது பதிவு செய்வது போலுள்ளது. இக்கருத்தை பகவான் அரச்சுனனுக்கே யல்லாமல் எல்லோருக்குமே சொன்னார் என்பதை ஸ்ரீ நாயகி சுவாமிகள் ஒரு நாமாவளியில்

ஸெத்துகன் ரி:யெத்தெனொ
மொத்து கா4ம் பொடெ3த் தெனொ
ரெத்தும் ஸங்கே3ஸ் தொகொ மொகொ

சத்தியப் பொருளாக இருப்பவன் எசோதையிடத்தில் மத்தினால் அடி வாங்கியவன். தேரில் உறுதிப் பொருளை உனக்கும் எனக்கும் சொன்னான் என்கிறார். மேலும் ஒரு பாடலில்

ஸெத்துலோ யே ஸேஸ்தெ நிஜம் மெநி
ரெத்துமு தெ 2ப்ப2ர்ஜுநுக் ஹரி
4க்திகார் மொகொ முக்தி தெ3வுஸ் மெநி
ஸெத்துகன் ஸங்கி3ரேஸ் கொங்கிகு

தேர் தட்டில் அர்ச்சுனனுக்கு ஹரியானவர், என்னிடத்தில் பக்தி செய் உனக்கு சத்தியமாக முக்தி அளிக்கிறேன் என்று சொன்னதோடு அல்லாமல் எல்லோருக்கும் என்றும் கூறுகிறார். இதே கருத்தை

தே3வுக் ப4க்தி கரெத் ஜீவன் முக்தி ஸே மெநி
தே3வு ஸர்ஜுநுகு ஸங்கி3ரி:யேஸ் ஹரி என்கிறார்.

மேற்கண்ட பாடல்களிலிருந்து ஸ்ரீ நாயகி சுவாமிகள் அன்பர்களே ! நாட்களை வீணே கழிக்காமல் இறைவனிடத்து பக்தி செய்வதைப் போன்ற நல்வழி வேறு எதுவும் இல்லை. பக்தியே முக்திக்கு வழி என்று மக்களை நல்வழி படுத்துகின்றார்.

ஸ்ரீ கண்ணன் பகவத் கீதை 8 ஆம் அத்தியாயத்தில்

அந்த காலே ச மாமேவ ஸ்மரன் முக்த்வா கலேவரம்
ய: ப்ரயாதி ஸ மத்3பா4வம் யாதி நாஸ்த்யத்ர ஸம்சய:

அந்திம காலத்திலும் என்னையே நினைந்து கொண்டு உடலை விட்டு, யார் போகிறானோ அவன் என் சொரூபத்தை அடைகிறான் இதில் சந்தேகமே இல்லை

யம் யம் வாபி ஸ்மரன் பா4வம் த்யஜத்யந்தே கலேவரம்
தம் ததேமவைதி கௌந்தேய ஸதா தத் பா4வ பா4வித:

குந்தியின் புதல்வா! அந்திம காலத்தில் எந்தெந்த பொருளை எண்ணிக் கொண்டு உடலை விடுகிறானோ அப் பொருளை பாவிப்பவனாய் அவன் அதையே அடைகிறான்.

தஸ்மாத் ஸர்வேஷ§ காலேஷ§ மாமனுஸ்மர யுத்4ய ச
மய்யர்பித மனோ பு3த்3தி4ர் மாமே வைஷ்யஸ்யஸம்சய:

ஆகையால் சர்வ காலமும்என்னை நினை. யுத்தமும் செய். மனம் புத்தியை என்னிடத்து அர்ப்பணம் செய்வதால் சந்தேகமின்றி என்னையே அடைவாய்

மேற் கண்ட மூன்று சுலோகங்களின்படி உடலை உகுக்கும் பொழுது ஜீவன் பரத்தினைப் பாவிக்க வல்லவனாயின் அவன் மீண்டும் பிறவாது பரத்தினை அடைகிறான். இது விதேக முக்தி எனப்படும். இவ் விதிக்கு விலக்கு இல்லை. ஆகவே இதைப் பற்றி ஐயம் கொள்ள வேண்டியது இல்லை. வாழ் நாளில் எது ஆழ்ந்து நெடிது எண்ணப் பட்டதோ அது தான் அப்பொழுது முன்னிலை யில் வரும். மேலும் வரும் அடுத்த பிறப்பானது அந்த எண்ணத்தின்படியே அமையும். ஆகவே அனவரதமும் காயத்தால் கடமையை செய்து கொண்டே கருத்தை இறைவனிடம் செலுத்த வேண்டும் என்பது கண்ணனின் கோட்பாடு. இத்தகைய பயிற்சி இகபர மிரண்டிற்கும் சாதனமாகிறது.

ஆகவே ஸ்ரீமந் நாயகி சுவாமிகள்

தூ4ம் ஹொய் ஜாய் ஏ ஸரீர் து3க்குந் தி3லேது ரா:ய்
காம் ஸெந்தொ ஏ காம் சல்தொ கரொ கர்முநு ஜாய்

சரீரமானது சுகத்தையேயன்றி துன்பமே கொடுக்கவல்லது. இறந்த பிறகு புகையாகிப் போகும் இவ்வுடல். ஆகவே உலகக் காரியங்கள் செய்து கொண்டிருக்கும் போதே இறைவன் நாமத்தை ஜபிக்கின்ற வேலையையும் செய்யுங்கள் கர்மங்கள் யெல்லாம் அழியும் என்று அறிவுரை கூறுகிறார். இவ்வரிய, உயர்ந்த, நலம்கொடுக்கும் இவ்வேலேயை என்றும் செய்யுங்கள் என்கிறார்.

பகவத் கீதையின் கருத்துக்களை நன்கு உணர்ந்துள்ள ஸ்ரீ நாயகி சுவாமிகள் கீதையின் கருத்துக்களைத் தன் வாழ்நாளில் கடைபிடித்தார். ' தான் பெற்ற இன்பம்பெருக இவ்வையகம் ' என்ற உயர்ந்த கருத்துப்படி மக்களும் கடை பிடித்து நன்னிலையை அடைய எளிய எளிய வழிகளை தம் பாடல்களின் மூலம் வழி காட்டியுள்ளார். ஒரு நாமாவளியில்

ஹுடிநிம் பி3ஸிநிம் சல்நிம் ஹோங்கு3ம்
நடனகோ3பால் த்4யான் ஸொண்ணொகொ மொந்நு

எழுந்திருக்கும் போதும், உட்காரும் போதும், நடக்கும் போதும், தூங்கும் போதும், நடனகோபாலனாகிய இறைவனின் நாமங்களை கைவிடாதே' என்கிறார்

ஹரி ஸத் பத3வி தேய் மொந்நு தெக
தெரி க3விலேது ரா: மொந்நு

ஹரியானவர் பரமபதத்தை அருளுவார். ஆகவே அவனைப் பற்றி பாடிக் கொண்டிரு என்றும்

ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி மெநி க3வி
ஆனந்தி நாசி மொந்நு
ஸெரிர் ஸொடி3 ஜெய்பி3ரி அவ்நாஸ்தக
ஹரி ஸெர செர்வாயி மொந்நு ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி என்று பாடி ஆனந்த கூத்தாடு.சரீரம் விட்டு பிறவா நிலையைப் பெறலாம் என்று மனதை நோக்கிக் கூறுகிறார்.

கோ3விந்தா மெனொ அஸ்கி வேளும்,
கோ3பாலா மெனொ அஸ்கி வேளும்

எப்பொழுதும் கோவிந்தா, கோபாலா என்று கூறுங்கள் என்று கூறுகிறார். பகவான் கருத்துப்படி நடந்தால் பகவானையே அடையலாம் என்பதை வலியுறுத்தவே.மேற்கண்ட பாடல் களைத் தவிர பெரும்பான்மையான சௌராஷ்ட்ர கீர்த்தனைகளில் சொல்லுகிறார் நாயகி சுவாமிகள். காந்தியடிகள் 'கோட்ஸே' என்பவனால் துப்பாக்கியால் சுடப்பட்ட போது ஹே ராம் ராம் என்று சொல்லித்தான் இறைவன் திருவடி அடைந்தார். அஜாமிளன் கதையில் கூட, அவன் தன் வாழ் நாளில் தீமைகள் பல செய்திருந்தாலும் தன் அந்திமக் காலத்தில் தன் மகன் நாராயணன் பெயரை ެஉச்சரித்ததால் விஷ்ணு தூதர்களே அவனை அழைத்துச் சென்றார்கள். என்பதை அறிகிறோம்.

வண்டியில் ஏறி ஊருக்குப் போகிறோம். வண்டியில் செல்வது நெறி. ஊருக்குப் போய்ச் சேருவது குறி. ஆனால் கடவுள் விஷயத்தில் நெறியும் குறியும் ஒன்றே. இறைவன் அருளால் அவன் தாள் வணங்குகிறோம். பிறகு அவன் அருளாலேயே அவனை அடைகிறோம். இறைவன் துணை நமக்கு இருந்தும் அவன் துணையை ஏற்க நம்மால் முடிவதில்லை.அதற்கெல்லாம் காரணம் நம்முடைய பண்படா மனமேயாகும். மனம் பண்பட்டால் தான் இறைவனை அடைய முடியும். ஐம்புலன்களின் அலைக்கழிப்பில் திண்டாடுகிறது மனது. அதனால் தான் என்னவோ பகவத் கீதையில் அர்ச்சுனன் பகவானிடம்

சஞ்சலம் ஹி மன: க்ருஷ்ண ப்ரமாதி43லவத்3த்4ருட2ம்
தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோரிவ ஸுது3ஷ்கரம்

கிருஷ்ணா! மனம் அலையும் தன்மையது, திகைக்கச் செய்வது,வலிமை உடையது, திடமுடையது. அதை அடக்குவது காற்றை அடக்குவது போன்று இயலாதது என்று நினைக்கிறேன் 'என்று கேட்கிறான். இச் சுலோகத்தில் மனதின் இயல்பு முழுவதும் அடங்கி யிருக்கிறது. ஓயாது அலைந்து திரிவதால் சஞ்சலமுடையது. புலியானது மற்ற விலங்குகளை கலக்கி துன்புறுத்துவதைப் போன்று மனதும் மனிதனைக் கலக்கிக் கொண்டிருக்கிறது பலம் உடையது மனம், இரத்தத்தை உறிஞ்சும் அட்டைப் பூச்சியைப் போல திடமுடையது. காற்றைக் கூட அடக்கி விடலாம் மனதை அடக்க முடியாது. மனதை அடக்க அடுத்த சுலோகத்தில் பகவான் ஸ்ரீ கண்ணன் கூறுகிறார்.

அஸம்சயம் மஹாபா3ஹோ மனோ து3ர்நிக்3ரஹம் சலம்
அப்4யாஸேன து கௌந்தேய வைராக்3யேண ச க்3ருஹ்யதே

தடந்தோளாய்! மனதை அடக்க முடியாது. அலைந்து திரியக் கூடியது என்பதில் சந்தேகமில்லை. இருந்தாலும் அப்பியாசத்தாலும்,வைராக்கியத் தாலும் அதை அடக்கலாம் என்று பதில் கூறுகிறார்.

பண்படாத மனதை அடக்க வேண்டி, ஸ்ரீ நாயகி சுவாமிகள் மனதிடம் கெஞ்சி கேட்டுக் கொள்கிறார், நயந்து வேண்டுகிறார், சில இடங்களில் திட்டுகிறார். மற்றும் சில இடங்களில் பயமுறுத்துகிறார். அவற்றில் சில காண்போம்

மொந்நு பா3ரே மொக மோஸ்கர்ந கொரே தொக
புன்னவயிரே ஜு:க்கு தி3ந்நு ர:வ்வாய்ரே
ஹிப்பி3ரா:ரே மொந்நு ஹிப்பி3ரா:ரே தொகொ
கொ3ப்பி3 ஹல்லுநா பத3ம் ஹரி தே3யிரே

மனமே! நீ என்னை மோசம் செய்யாதே. உனக்கு புண்ணியம் உண்டாகட்டும் நீ நீண்ட நாள் இருப்பாயாக, அங்கும் இங்கும் அலையாமல் நில்லுடா மனமே நில். உனக்கு ஹரியானவர் என்றைக்கும் நிலைத்திருக்கும் மேலான பதத்தை அருள்வார் என்றும்,

ஜாநொகோ ரெபா34மி த4மி
ஜாநொகோ ரெபா3 -- ஸ்ரீ
ஜானகி ரமண தா3ஸுன்
பஸ்கடூஸ் ஜநொரெபா3

மனமே கண்டபடி ஓடி ஓடி என்னை அலைக்கழிக்காதே. ஜானகி ரமணன் அடியார்கள் பின்னால் தான் நீ செல்ல வேண்டும் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறார்.மேலும்

மொந்நூ மீ ஸங்குஸைகி மோக்ஷிகுவாட் து3ர்
குண்ணுந் ஸெர மிள்நா ரா:ஸ்தே வாட்
புந்நூ பாப் ஹாலவெ ஸெரிரநித்யம் தொர
ஜுந்ந ஹட்வதுந் ஸோட்3 ஸோட்3 ஸோட்3 ஸோட்3

மனமே! மோக்ஷத்திற்குச் செல்கின்ற வழியை உனக்கு நான் எடுத்துக் கூறுகிறேன். நீ தீய எண்ணங்களோடு சேர்ந்திராமல் இருப்பதே வழி. நாம் செய்த பாப புண்ணியங்களினால் ஏற்பட்ட இந்த உடம்பு நித்யமில்லாதது. ஆகவே உன் பழைய பாப நினைவுகளை விடு! விடு! விடு!விடு! என்கிறார். அடுக்குத் தொடரில் வரும் தொடர் மூன்றுக்கு மேல் சொல்லக்கூடாது என்பது விதி. ஆனால் கருத்தை வலியுறுத்திச் சொல்வதற்காக (ஸோட்3) விடு என்ற வார்த்தையை நான்கு முறை கூறுகிறார்.

அரெ மொந்நு தூ கரொரி:யெ காம் அஸ்கி
மொரன் உஜ்வாவுனுகு ஹொயெஸ்தெ
பு3ரொ தொர ஸெர மொகொ பு3ரொ

ஏ மனமே! நீ செய்கின்ற காரியங்கள் அனைத்தும், பிறப்பிறப்பிற்கு வழி கோலும். உன் சகவாசம் எனக்கு போதும்! என்று சலித்துக் கொள்கிறார்.

சுட்டு மொகொ அங்கு3ன் உட்செத்
பொ3ட்டு தொர் கு3ட்டுநஸ்கி
மெட்டு மர்க்யாத் ஜல்லே மொந்நு

என்னை அங்கும் இங்கும் சுற்றி இழுத்துக் கொண்டிருந்தால், உன்னுடைய வண்டவாளங்களை யெல்லாம் வெளிபடுத்தி விடுவேன், மட்டு மரியாதை காப்பாற்றிக் கொள் ' என்றும்

ஜுன்ன ஜ:ண்ணி கா4ம் பொண்ணொகொ மொந்நு
பொன்னா ஜா:ட் ஹிங்கெ3 ஹரிக் ஸொண்ணொகோ --தொர
தின்னுனு கோ3 ஜவண்ணகொ ஐகி

பிய்ந்து போன பழைய விளக்குமாற்றால் அடிவாங்காதே மனமே! புன்னை மரமேறி விளையாடிய ஹரியை விட்டு விடாதே. உன் வாழ் நாளை வீணே கழிக்காதே என்று கூறும் சுவாமிகள் தமிழ்ப் ''பேய் மனமே! நாய் போல அலையாதே எம் பெருமானடி சேர் '',அபசாரப்பட்டு அலையாதே நெஞ்சே! மெய்யன்பர்களிடத்தில்''   என்று கூறுகிறார் மேலும் ஒரு பாடலில் மனதை மூட மனமே! மட்டி மனமே! கல் மனமே! என்றெல்லாம் திட்டி அதட்டுகிறார்

உடலைக் கொண்டு முறையாக வேலை செய்யத் தெரிந்திருப்பது போல் அதற்கு ஒரு வேலையும் கொடுக்காது அமைதியாக அடக்கி வைக்கவும் தெரிந்திருப்பவனே யோகி. அத்தகைய யோகி தியானத்தில் அமரும் போது எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை பகவான் கூறும் போது

தத்ரை காக்3ரம் மன: க்ருத்வா யதசித்தே3ந்த்ரியக்ரிய:
உபவிச்யாஸனே யுஞ்ஜ்யாத்3 யோக3மாத்ம விசுத்34யே

ஆசனத்திலமர்ந்து , மனதை ஒருமைப் படுத்தி , மனம், இந்திரியம் இவைகளின் செயல்களை அடக்கி அந்தக்கரண சுத்தியின் பொருட்டு யோகம் பயில வேண்டும்'என்றும்

நாத்யச்னதஸ்து யோக3 அஸ்தி ந சை காந்த மனச்னத:
ந சாதிஸ்வப்னசீலஸ்ய ஜாக்3ரதோ நைவ சார்ஜுன

அரச்சுனா, மிகை பட உண்பவனுக்கு யோகம் கை கூடுவதில்லை. அவ்வாறே ஒன்றுமே உண்ணாதவனுக்கும் யோகம் சரியாக அமைவதில்லை. மிகை பட உறங்குபவனுக்கும், மிகை பட விழித்திருப்பவனுக்கும் யோகம் கை கூடுவது இல்லை.

கண்ணபிரான் கூறிய கருத்தையே ஸ்ரீமந் நாயகி சுவாமிகளும் தியானம் செய்யும் போது எவ்வாறெல்லாம் இருக்க வேண்டும் என்பதை தம் சௌராஷ்ட்ர மொழிப் பாடலில் மிகத் தெளிவாகக் கூறுகிறார்

பத்3மாஸனம் தைலி தூ பீ3ஸிரே --ஹாத்
பாய்ம் பொள்ளி ஸெரீர் நித்தக பீ3ஸிரே
பத்3மநாபு4 த்4யாந் ஹோர் பீ3ஸிரே
பாபஸ்கி த4மய் வாட் யேஸ் பீ3ஸிரே ''

''ஹோங்கு3ன்ன உபிர் கர்லன் ஹோநாரே --பா4த்
உன்ன உபிர் கா3ன் ஹோநாரே

தியானம் செய்ய முற்படுகையில் பத்மாசனத்தில் உடலை நிமிர்த்தி கைகளை கூப்பி அமரவேண்டும், பத்மநாபனின் நாமங்களை தியானம் செய்தால் பாபம் எல்லாம் ஓடிவிடும், தியான முறை இது தான் , மற்றும் உறக்கம் மிகைபடவும் குறையவும் கூடாது. அதேபோல் தியானம் பழகுகின்றவர்கள் உணவை அதிகமும் உண்ணக் கூடாது, உண்ணாதிருக்கவும் கூடாது என்று அறிவுரை கூறுகின்றார்.

பகவான் கீதையில்

பிதாஹமஸ்ய ஜக3தோ மாதா தா4தா பிதாமஹ

இந்த உலகனைத்திற்கும் நான் அன்னை, தந்தை, பாட்டனார் மற்றும் கர்ம பலனை கொடுப்பவனாகவும் இருக்கிறேன் என்று அச்சுதன், அர்ச்சுனனுக்கு கூறுகிறார். இக் கருத்தை நாயகி சுவாமிகள் பகவானே நமக்கு தாய், தந்தை குரு, தெய்வம் அனைத்தும் அவரே என்று பொருள் பட

மாய் பா3ப் கு3ரு தே3வ் தூஸ் ஸேவதெனாவி ''
''மாய் பா3ப் கு3ரு தே3வ் அஸ்கி தூஸ் மொகொ ராக4வேந்த3ரா''
'' மாயி பா3பு கு3ரு தே3வு ரெங்க ஸாயி''என்றும் பாடி

மிக எளிதாக விளக்குகிறார். நம் கண்ணுக்கு தென்படுகின்ற முதல் தெய்வங்கள் தாய், தந்தை, குரு ஆகியோர். இவர்கள் நல்வழி படுத்தி தெய்வத்தைக் காண வைப்பதால் இவ்வாறு ஸ்ரீ நாயகி சுவாமிகள் கூறுகின்றார்.

அடுத்து பகவான்

யோ மாம் பச்யதி ஸர்வத்ர ஸர்வம் ச மயி பச்யதி
தஸ்யாஹம் ந ப்ரணச்யாமி ஸ ச மே ந ப்ரணச்யதி

யார் என்னை எல்லாவற்றினிடத்தும்,எல்லாவற்றையும் என்னிடத்தும் பார்க்கிறானோ, அவன் காட்சியினின்று நான் மறைவதில்லை. அவனும் என் காட்சியினின்று மறைவதில்லை என்று பக்தனுக்கும், பரமாத்மாவிற்கும் உள்ள தொடர்பு பற்றிக் கூறுகிறார்.

ஒரு முறை நாரத மஹரிஷி கயிலாயத்திற்குச் சென்று ஞானப் பழம் ஒன்றை சிவபெருமானிடம் சமர்ப்பித்தார். அருகிலிருந்த விநாயகப் பெருமானும், முருகப் பெருமானும் தங்களுக்குத்தான் அப் பழம் தேவை என்று கேட்டனர். இருவரும் அன்பிற்குரிய பிள்ளைகள். யாருக்குக் கொடுப்பது என்று எண்ணி உலகத்தை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ அவர்கள் பழத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறினார் தந்தை. உடனே முருகப் பெருமான் தன் வாகனமான மயில் மீது ஏறி உலகை வலம் வர பறந்தார். விநாயகப் பெருமான், ஸ்ரீ முருகனோடு போட்டிப் போட முடியுமா ? அவர் வாகனம் மூஞ்சூரு ஆயிற்றே. ஆகவே தாயும் தந்தையும் தான் உலகம் என்று அறிந்து பெற்றோரை வலம் வந்து பழத்தைப் பெற்றுக் கொண்டார் என்பது அனைவருக்கும் தெரியும். இவ் உண்மை கருத்து முருகப் பொருமானுக்குத் தெரியாதா என்ன ? உலகமே தாய் தந்தை, தாய் தந்தையே உலகம் என்பதை அறிவிக்கவே இவ்வாறு செய்தார். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறான் இறைவன் என்பதை

கொம்மிம் பொ4ரி ரி:யெஸ்தெனொ''
''பொ4ரி ரி:யெ ஸ்ரீ ஹரி

எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்திருப்பவன்என்றும் மேலும்

இக் கருத்தையே நாயகி சுவாமிகள்

அண்ட3 பிண்ட3 பி3ர்மா:ண்டு3ன்
தெகா4லுஸ் ஹொயெஸ்தெ ஏ
அண்3ட பிண்ட3 பி3ர்மா:ண்டுன்
தெகொ பி4த்தரூஸ் ஸேஸ் தெ

இந்த உலகமனைத்தும் அவனாலேயே உண்டாக்கப்பட்டது. உலகத்திலுள்ள அனைத்தும் அவனுக்குள்ளேயே இருக்கின்றன என்றும்

தேல் தீளும் பொ4ரி ரி:யெஸொ கா3ல் ஹொல்லெ
கொம்மிமு பொ4ரி ரி:யெஹால் தொர் பதா3ல் த3மர் பூ3ல் மீ மய்லேது ரி:யெஸ்

எள்ளில் எண்ணெய் நிறைந்திருப்பது போல் கீழும், மேலும் எங்கும் நிறைந்திருப்பதால் உன் தாமரைத் திருவடிகளையே நான் வேண்டுகிறேன் என்கின்றார்

பண்பட்ட யோகி ஒருவன் எவ்வாறு பரம் பொருளான இறைவனை அடைகிறான் என்பதை பகவான் விளக்குகின்றார்

ஸர்வத்3வாராணி ஸம்யம்ய மனோ ஹ்ருதி3 நிருத்4ய ச
மூர்த்4ன்யாதா4யாத்மன: ப்ராண மாஸ்தி3தோ யோக3 தா4ரணம்

ஓ மித்யேகாக்ஷரம் ப்3ரஹ்ம வ்யாஹரன் மாமனுஸ்மரன்
ய: ப்ரயாதி த்யஜன் தே3ஹம் ஸ யாதி பரமாம் க3திம்

இந்திரியத் துவாரங்கள் எல்லாவற்றையும் அடக்கி மனதை ஹிருதயத்தில் நிறுத்தி, தன் பிராணனை உச்சந் தலையில் வைத்து யோக தாரணையில் நிலைப் பெற்று '' ஓம் ''  என்கின்ற ஏகாக்ஷரமாகிய பிரம்மத்தை உச்சரிந்துக் கொண்டு, என்னை ஸ்மரித்துக் கொண்டு உடலை நீத்து யார் போகிறானோ அவன் பரம கதியைப் பெறுகிறான்.

தம் வாழ்நாள் பூராவும் பகவான் கண்ணனின் சிந்தனையிலேயே இருந்து கீதையின் தத்துவப படி வாழ்ந்து பக்தி நெறி உபதேசித்த ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள்  கண்ணபிரான் கீதையில் உபதேசித்துள்ளபடியே 1914ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6-ஆம் நாள் தமிழ் பிரமாதீஸ வருடம் மார்கழி மாதம் 23 ஆரம நாள் அஷ்டமி திதியன்று இரவு தம் உடல் நிலை சரியில்லை என்று கூறி சுவரோரம் பத்மாசனமிட்டு நிமிர்ந்து அமர்ந்து சுவாச பந்தனம செய்து கண்களை மூடி ''ஓம் ''  என்ற ஏகாக்ஷரமாகிய பிரம்மத்தை உச்சரித்துக் கொண்டு யோக தாரணையில் அசைவின்றி அமர்ந்தார். நவமியும், தசமியும் கழிந்தன. அன்ன ஆகாரமின்றி தியானத்தில் ஆழ்ந்தார். சீடர்களும் பக்தர்களும் இறைவனின் திருநாமங்களைப் பாடிக் கொண்டிருந்தனர். முக்கோடி ஏகாதசியாகிய புண்ணிய நாள்,  சுவாமிகளுடைய தமையனார் மகன் ஹரி கிருஷ்ணய்யர் சென்னையிலிருந்து வந்து சேர்ந்தார், அங்கிருந்தோர் அனைவரும்''ஹரி' அவ்டியோ -ஹரி வந்து விட்டார்'' என்று கூறினர். சுவாமிகள் சுமார் ஐந்து நிமிடங்கள் கல கலவென்று சிரித்தார் ஆம் சுவாமிகள் ஏற்கனவே பாடிய ஸெணமவி சேவ தீ3 என்ற கீர்த்தனையின் பிரகாரம் ஸ்ரீ லக்ஷிமி தேவியுடன் வைகுந்தநாதன் கருடன் மீது எழுந்தருளி வருவதைக் கண்ணாரக் கண்டு ஹரி வந்து விட்டார் என்று ஆகாயத்தைப் பார்த்து சிரம் மேல் கரங்குவித்தார். பத்மாசனத்தில் அமர்ந்த வண்ணம் 8--1--1914 வியாழக் கிழமை பகல் 12 மணிக்கு ஆசார்யன் திருவடி அடைந்தார்

கீதையின் சாரத்தை அறிந்து, தம் வாழ்நாளில் கடைபிடித்து, மக்களுக்கு செல்வ நிலையாமை, யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை போன்ற வற்றை உணர்த்தி நல்வழி வாழ வேண்டும் என்று உபதேசித்ததை நாமும் கடைபிடித்து, மதுரை அழகர் கோயில் செல்லும் வழியில் (காதக் கிணறு) நடனகோபாலபுரம் என்னும் இடத்தில் அமைந்துள்ள சுவாமிகளின் பிருந்தாவனக் கோயிலுக்குச் சென்று வணங்கி வாழ்வில் முன்னேறுவோமாக !

கண்ணன் சொன்னதென்ன கீதையிலே -- அதைக்
கருத்தில் கொள்வாய் உந்தன் வாழ்கையிலே -- கண்ணன்
ஓஹோ கண்ணன் சொன்னதென்ன கீதையிலே

அண்ணன் தம்பி சுற்றம் என்பதெல்லாம் --உந்தன்
அறிவில் குழப்பம் தரும் வார்த்தைகளே --கண்ணன்

எவன் எதைச் செய்தாலும் அவன் அறிவான் --அந்த
எண்ணத்தின் தரம் கொண்டு பலன் தருவான் --கண்ணன்

அவன் பெயரைச் சொல்லி கடமையைச் செய் --அதன்
விளைவுகளை அவனுக்கர்ப்பணம் செய் ---கண்ணன்

(ஸ்ரீ சுவாமி சிவானந்தா ஸத் சங்கத்தில் பாடப்படும் பாடல்)


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube