ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகள் தமது பிருந்தாவனம்.ஸ்ரீரங்கம் கோயில் சந்நிதியில் அமைய வேண்டும மென நினைத்திருந்தார். ஆனால் அது இயலவில்லை. ஆகையால் தாம் முக்தி அடைவதற்கு இரண்டாண்டுகள் முன்பு 1912 ஆம் ஆண்டில் திவ்ய தேசங்களில் ஒன்றானதும், ஆழ்வார்கள் மற்றும் நாயகி சுவாமிகளால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட அழகர் கோயிலுக்குச் செல்லும் ரஸ்தாவில், காதக் கிணறு என்னும் கிராமத்தின் மேற்குப் பக்கம் யானைமலை யோக நரசிங்கப் பெருமாள் சந்நிதிக்கு நேர் எதிரில் தம் பிருந்தாவனம் அமைக்க 22 செண்டு காலி மனையை தம் குடும்பத்தார்களை வாங்கச் செய்தார்.

1914 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி கார்த்திகை நக்ஷத்திரமும், முக்கோடி ஏகாதசியும் கூடிய நன்நாளில் வியாழக்கிழமை, பகவான் ஸ்ரீ ஹரி லக்ஷிமி தேவியுடன் காட்¢சி கொடுத்து சுவாமிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டார்.

மேல் பாராவில் குறிப்பிட்டுள்ள இடத்தில் சுவாமிகளுடைய திருமேனியை அமர்ந்த நிலையில் குழியில் இருத்தி அதன்மேல் சுவாமிகளின் குடும்பத்தார்களால் (சமாதி) பிருந்தாவன கருவறை கட்டி முடிக்கப்பட்டு மண்டலாபிஷேகம் செய்யப் பட்டது.பின் சிறுகச் சிறுக பேஸ் மட்டம் வரை கல் கட்டிடம் கட்டி முடிக்கப் பட்டது.

சில வருட இடைவெளிக்குப்பின் திருC.M.V. கிருஷ்ணமாச்சாரி அவர்கள் தம் சொந்த பணத்திலிருந்தும் நாயகி சுவாமிகளின் சிஷ்யர்கள் மற்றும் பக்தர்களிடமிருந்தும் வசூல் செய்து மஹா மண்டபம், கருவறை கோபுரம், பிரதான வாயில் கருங்கல் வெளிப் பிரகாரச் சுவர்கள் கட்டிய பின் கருவறை சமாதி கட்டிடத்தின் மேல் சுவாமிகளின் இஷ்ட தெய்வமான ஸ்ரீ வேணு கோபாலன் விக்ரகம்(மூலவர்) பிரதிஷ்டை செய்து பிருந்தாவன ஆலயம் கட்டி முடிக்கப் பட்டு C.M.V.கிருஷ்ணமாச்சாரி அவர்கள் தலைமையில் 1914 ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி குரு வாரத்தன்று வெகு சிறப்பாக ஸம்ரோக்ஷணம் நடைபெற்றுள்ளது. கள்ளழகர் மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவிற்காக தம் ஆஸ்தானத்தை விட்டு மதுரைக்குச் செல்லும் பொ ழுதும் திரும்பிச் செல்லும் பொழுதும் தமது நாயகியாக ஊரை அலங்கரித்த உத்தமரான நடனகோபால நாயகிக்கு ஸேவை தந்து செல்கிறார்.

சுவாமிகள் அவதரித்ததும், முக்தி அடைந்ததும் மார்கழி மாதம், குருவாரம் மற்றும் அவரது ஜன்ம தினமும், பிருந்தாவனத்திற்கு எழுந்தருளிய தினமும் மிருகசீர்ஷ நட்சத்திரமே. என்னே அதிசயம்! இதிலிருந்து சுவாமிகளின் தெய்வீக ஆற்றல் நன்கு புலனாகிறது.

சுவாமிகளின் குடும்பத்தாரும்,சிஷ்யர்களும் சுவாமிகளின் பக்தர்களும் அங்கத்தினர்களாக சேரந்து ஸ்ரீமந் நடன கோபால நாயகி ஸ்வாமிகள் ஸபையை 1947 ஆம் ஆண்டு ஸ்தாபித்து பதிவு செய்யப்பட்டு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகஸ்தர்களால் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது.1948ஆம் ஆண்டில்K.C.K.R. ருக்மணி அம்மாள் தன்னுடைய பாலேஸ் ரோட்டில் உள்ள (பழைய டோர் நிர் 191) வீட்டை சபையினருக்கு தரும சாசனம் மூலம் கொடுக்கப் பட்ட வீட்டின் வருமானத்தைக் கொண்டு பரிபாலிக்கப் படுகிறது. தற்பொழுது T.K.ஆத்மாராம் தலைவராகவும் C.K.ரமேஷ் பாபு செயலாளராகவும் செயலாற்றுகின்றனர். ( இவர்C.R..கேசவய்யர் அவர்களின் குமாரர். சுவாமிகளின் ஐந்தாவது தலைமுறையைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது)

சுவாமிகளின் பிருந்தாவனத்தில் சுவாமிகளின் திருமேனியை வைத்த இடத்தின் மேல் வேணு கோபாலர் தெய்வ சிலைக்குப் பதிலாக சுவாமிகளின் திவ்ய உருவச் சிலை தான் வைத்து பூஜிக்க வேண்டும் என்று பல சான்றோர்களின் அறிவுரைப்படி, 'ராணி சாரீஸ் 'திரு ராணி.S. சாந்தாராம் அவர்கள் தலைமையில் திருப்பணிக்குழு அமைத்து கோயிலை புதுப்பிக்கும் சமயம் வேணுகோபாலர் சிலையை அகற்றி நாயகி சுவாமிகளின் உருவச் சிலையை வைத்தும். கோயிலை விரிவுபடுத்தி புதிதாக கருவறை கட்டி கோபுரம் அமைத்து அகற்றப்பட்ட வேணுகோபாலர் திருவுருவச் சிலையுடன் ருக்மணி, சத்தியபாமா திருவுருவச் சிலைகளையும் பிரதிஷ்டை செய்து புது சந்நிதியை ஏற்படுத்தி ஸெளராஷ்ட்ர விஜயாப்தம் 686 க்கு தமிழ் வெகுதான்ய வருஷம் வைகாசி மாதம் 24 ஆம் தேதி1998ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 9-00 மணி முதல்10-00மணிக்குள் கடகலக்னத்தில் வெகு சிறப்பாக(ஸம்ரோக்ஷணம்)கும்பாபிஷேகம் நடைபெற்றது

தினசரி பூஜைகளுடன், பிரதி மாதம் சுவாமிகள் ஜென்ம நக்ஷத்திரம் மிருகசீர்ஷத்தன்று பகவத் பாகவத கோஷ்டிகளால் பஜனையும் ஆடிப்பூரம் உற்சவம், வருடம் தோறும் மார்கழி மாதம் சுவாமிகள் ஜென்ம நக்ஷத்திரமான மிருகசீர்சம் தினத்தில் ஜெயந்தி விழாவும் நிர்வாகஸ்தர்கள், ஸபா அங்கத்தினர்கள், பக்தகோடிகள், பகவத் பாகவத கோஷ்டிகளோடு பிருந்தாவன பிரகாரத்தில் , சுவாமிகளின் பாடல்களை ஆடிப் பாடி 108 பிரதக்ஷணம் சுற்றி வந்து விசேஷ அபிஷேக ஆராதனையுடன் சமாராதனையும் நடை பெறுகிறது. தவிர ஸ்ரீ வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை, ஸ்ரீமந் நாயகி சுவாமிகளின் ஆன்மிக இளைஞர் எழுச்சி இயக்கத்தினரால் வாகனப் பேரணி வெகு சிறப்பாக நடை பெற்று வருகிறது. இப் பேரணியில் சுவாமிகளின் பக்தர்கள் பல ஊர்களிலிலிருந்து வந்து கலந்து கொண்டு சிறப்பிக்கின்றார்கள். அனைவருக்கும் சுவாமிகளை தரிசித்த பின் பிரசாதம் வழங்கப்படுகின்றது.

மதுரையில் வருடந்தோறும் மார்கழி மாதம் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசியன்று அழகிய பல்லக்கில் நாயகி சுவாமிகள் திருவுருவப்படம் வைத்து அலங்கரித்து சுவாமிகள் அணிந்த கொண்டையையும் வைத்து பகவத் பாகவத கோஷ்டியுடன் சபைநிர்வாகஸ்களும் சேர்ந்துகாலை 10 மணிக்குப் புறப்பட்டு பட்டணப் பிரவேசம் (ஊர்வலம்) நடைபெறுகிறது. சுவாமிகள் பல்லக்கு வரும் வீதிகளிலெல்லாம் பக்தர்களால் ஏராளமான பூஜை செய்யப் படுகிறது.

வேண்டுபவர்களுக்கு வேண்டியவற்றை அருள்பாலித்து வரும் ஸ்ரீமந் நடனகோபால நாயகி ஸ்வாமிகளின் பிருந்தாவன கோயிலுக்குச் சென்று வணங்கி குருவருளும் திருவருளும் பெற்று உய்வோமாக.


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube