|
|
|
|
மதுரையின் ஜோதி ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகள் ஸ்ரீவிலிபுத்தூர் ஆண்டாள் மீது
அருளிய கீர்த்தனைகளைக் கண்ணுற்ற (மதுரையிலுள்ள மதுரைக் கல்லூரி தமிழ்த்துறைத்
தலைவராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற பேராசிரியர்) ஸ்ரீமான் இரா.அரங்கராஜன் அவர்கள் ஸ்ரீமந்
நடன கோபால நாயாகியைப்பற்றி வர்ணித்துள்ளதை காண்க.
ஸ்ரீ:
நாயகியைப் பாடிய நாயகியார்.
ஆண்டாள் மீது அருளிய கீர்த்தனை
வண்புதுவை நகரில் வாழவந்த நிலமகள் நங்கைக்குத் தந்தையார்
மின்னுநூல் விட்டுசித்தன்;
அவன் ஆசையை நிறைவேற்றிய அண்ணர் எம்பெருமானார்;
நல்ல தோழியாக வாழ்ந்தவரோ நம் நடன கோபால நாயகியார்.
குலசேகராழ்வார் அரங்கனைக் கண்குளிரக் காணத் துடித்தார்;
நாயகியாரோ ஆண்டாளைக் கண்டு அடி பணியத் துடித்தார்.
வில்லிப்புத்தூரில் குடியேறுவது என்று கொலோ?
ஆண்டாள் அடிக்கீழ் புகுவது என்று கொலோ?
அன்னை ஆண்டாளைக் கண்டு களிப்பது எப்போது?
இவ்வாறு ஏங்கியது நாயகியாரின் நல்லுள்ளம்.
தாம் ஏங்கியதோடு நில்லாது தம்மை அடைந்தவர்களுக்கெல்லாம்
உபதேசித்ததும் அவ்வாறே இருந்தது!
சித்தி தரும் புத்தூரதனில் சென்றடையுங்கள். சென்றடைந்தால்
இகபர வாழ்வு பலிக்கும்; இடர் பல நீங்கும் என்கிறார்.
செல்வக் கோதை ஆண்டாள் வல் வினை தீர்ப்பாள்;
உயர் மேல்வீடு சேர்ப்பாள்.
ஆண்டளை வருணிக்கும் அழகு காண்மின்
திருவாடிப்பூரத்தில் அவதரித்தாள்; அரங்கனை நெருங்கி
அடைந்தான். அண்டரும் முனிவரும் தொண்டரும் தோத்திரம்
செய்யத் தென்னரங்கனை அடைந்தாள்.
இவ்வாறு ஆண்டாளுக்கோர் ஆருயிர்த் தோழியாக நாயகியாரை
நல்கிய கூடல் மாநகர்தனில் உறையும் கூடலழகரை வாழ்த்தி வணங்குவோம்;
மதுரநாயகியாரின் நல்வாக்குகளை நடைமுறைப்
படுத்துவோம்..
கோதை வாழ்க; கோதை தோழி வாழ்க;
(ஒப்பம்) இரா . அரங்கராஜன்.
|
|